மருத்துவமனை சிகிச்சையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: ஆணையத்தில் விவேக் ஜெயராமன் தகவல்? 

அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   
மருத்துவமனை சிகிச்சையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: ஆணையத்தில் விவேக் ஜெயராமன் தகவல்? 

சென்னை: அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது குறித்த உண்மை நிலையை வெளிக் கொணர நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி இளவரசியின் மகனும் ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவும் ஆன விவேக் ஜெயராமன் செவ்வாயன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவரிடம் காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணையானது 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த விசாரணையில் ஜெயலலிதாவுடன் அவருக்கு சுமுக உறவு இருந்ததா? அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை அவர் பார்த்தாரா உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதற்கு அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் கூறியதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை முடிவில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தினை எழுத்து வடிவில் உருவாக்கி அவரின் கையெழுத்து பெறப்பட்டுளதாகத் தெரிகிறது.       

ஆணைய விசாரணை முடிந்து வந்த விவேக் ஜெயராமனிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டது, ஏதேனும் விடியோ ஆவணங்களை அளித்தீர்களா  என்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய பொழுது அவர்  கூறியதாவது:

இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள். இன்னும் சிறிது நாள் பொறுத்திருங்கள். விசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நான் எதுவும் கூற முடியாது. என்னை மீண்டும் 28-ஆம் தேதி ஆஜராகும்படி   அழைத்துளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com