உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் பயன் இல்லை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் பயன் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் பயன் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது.
தமிழகத்தில் நடத்தப்படும் மாநாடுகளுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தாலும் கூட, அது கடமைக்கு விளம்பரம் தேடும் நிகழ்ச்சியாக மட்டுமே அமைகிறது. இதனால் யாருக்கு பயன் கிடையாது.
2015-ஆம் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள அளவில் எந்தவிதமான தொழில் வளர்ச்சியோ, வேலைவாய்ப்பு பெருக்கமோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்துக்கு வந்த மொத்த முதலீடுகளின் அளவு ரூ.32,702 கோடி மட்டும்தான். அதில் இதுவரை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.13 ஆயிரம் கோடி. இது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் வெறும் 5.34 சதவீதம்தான். 
ஆந்திரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இதுவரை 60 சதவீதத்துக்கும் கூடுதலான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. முதலீட்டாளர்கள் மாநாடு அதுபோல நடத்தப்பட வேண்டும். மாறாக பெயரளவில் நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தவறாகும்.
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய தொழில் திட்டங்களுக்கு விண்ணப்பித்த 3 வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் என்பது இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாமலேயே முதலீடுகள் குவியும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com