ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! ராமதாஸ்

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! ராமதாஸ்

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
விவசாயிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், அவர்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவையாக மாறி வருகின்றன.  ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் நடைபெறும் ஊழல்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அதைத்  தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

உழவர்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் கூடங்களுக்கு உழவர்கள் கொண்டு வரும் விளைபொருட்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை ஒவ்வொரு நாளும் மறைமுக ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட வணிகர்களிடமிருந்து ஒவ்வொரு விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலைப்புள்ளிகள் பெறப்பட்டு, அவற்றில் அதிகபட்ச தொகை கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும். ஆனால், இங்கு தான் உழவர்களை சுரண்டும் செயல் தொடங்குகிறது. வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைவான கொள்முதல் விலையை குறிப்பிடுவதால் உழவர்களுக்கு நியாயமான அளவில் கொள்முதல் விலை கிடைப்பதில்லை. வணிகர்கள் கூட்டணி அமைத்து  விலையை குறைத்து நிர்ணயித்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் அந்தக் கடமையை நிறைவேற்றுவதில்லை.

விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சாக்குகளில் மாற்றி விற்பனைக்காக வைக்கவேண்டும். இந்த பணியை செய்யவும், எடையிட்டுக் கொடுக்கவும்  கூலித் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக  எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தாலும், ஒவ்வொரு பணிக்கும் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. உதாரணமாக எந்த ஒரு பொருளையும் எடை போட்டுத் தருவதற்காக  மூட்டைக்கு ரூ.20 வழங்க வேண்டும்; ரசீது போட்டுத்தர ரூ.50 வழங்க வேண்டும் என்று அங்குள்ள தொழிலாளர்களும் அதிகாரிகளும் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு பணம் தர மறுக்கும் உழவர்களை அங்குள்ளவர்கள்  தரக்குறைவாக பேசுவதுடன், மூட்டைக்கு 2 அல்லது 3 கிலோ எடையை குறைத்து பதிவிடுகின்றனர்.

இதன்மூலம் உழவர்களுக்கு திட்டமிட்டு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். அதேநேரத்தில் குறைவான எடை பதிவு செய்யப்பட்ட மூட்டையை கொள்முதல் செய்யும் வணிகர்களை அங்குள்ள ஊழியர்களுக்கு தெரியும் என்பதால், அவர்களிடம் அந்த மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள எடையை விட அதிகமாக  பொருட்கள் இருப்பதாகக் கூறி கூடுதலாக பணம் பெற்றுக் கொள்வார்கள். ஒரு மூட்டைக்கு ரூ.20 வீதம் கையூட்டு பெறப்பட்டால், ஒரு நாளைக்கு 10,000 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டால் ரூ.2 லட்சம் கையூட்டாகப் பெறப்படுகிறது. ஒரு நாளைக்கு 1000 உழவர்கள் வந்தால் அவர்களிடமிருந்து ரசீது போடுவதற்காக மட்டும் தலா ரூ.50 வீதம் ரூ.50,000 கையூட்டாகப் பெறப்படுகிறது. இதுதவிர வேளாண் பொருட்களுக்கு விலை குறைத்து நிர்ணயிக்கப்படுவதால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் தனியாகும்.

அதுமட்டுமின்றி, உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய பணத்தை  கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் உழவர்கள் சில நேரங்களில் நாள் கணக்கில் கூட வெட்ட வெளியில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. உழவர்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இதுதான் உதாரணமாகும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் ஊழல்களை மதிப்பிட்டால் அது மலைக்க வைக்கும்  தொகையாக இருக்கும். இதனால் ஏற்படும் அத்தனை இழப்புகளும் உழவர்களுக்குத் தான்.  உடனடியாக இந்த ஊழல்களை தடுக்கவும், ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும்.  ஊழலைத் தடுப்பதற்காக எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும்;  எடை போடுவதையும், விலை நிர்ணயிக்கப்படுவதையும் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒரு வாரத்திற்குள் இதை செய்யத் தவறினால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பாக  தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com