சபதம் முதல் மௌன விரதம் வரை: சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட தினம் இன்று

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.
சபதம் முதல் மௌன விரதம் வரை: சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட தினம் இன்று

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனவும், சசிகலா, சுதாகரன், இளவரசியை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்றும், அதன்படி, மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.

பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா காரில் புறப்பட்டார்.

வீட்டில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். இதன்பின், மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு நண்பகல் 12 மணிக்குச் சென்றார்.

சபதம் செய்த சசிகலா: பெங்களூரு செல்லும் முன்பு, ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா கையால் மூன்று முறை சமாதியில் அடித்து சபதம் செய்தார். பின்னர் சமாதியை சுற்றி வந்து வணங்கினார்.

சூழ்ச்சி, துரோகம், இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வருவேன் என சபதம் செய்து அங்கிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருடன் இளவரசியும் காரில் சென்றார்.

பின்னர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குச் சென்று அங்கு எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி வணங்கி அங்கு தரையில் அமர்ந்து தியானம் செய்தார் சசிகலா. மேலும், அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

வி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பிப்ரவரி 15ம் தேதி மாலை சரணடைந்தனர்.

இவர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்து நீதிபதி அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார்.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடையும் நிலையில், சிறையில் பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாகக் கொடுத்து சிறப்பு சலுகைகளைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான சில விடியோக்களும் வெளியாகின.

பெங்களூரு மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க சசிகலாவுக்கு தனி அறை: டிஐஜி டி.ரூபா புகார்

இந்த குற்றச்சாட்டுகளை எழுப்பிய காவல்துறை உயர் அதிகாரியும் இட மாற்றம் செய்யப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்கிடையே, சசிகலாவை உறவினர்கள் சந்திப்பதிலும், மற்ற கைதிகளுக்குப் பின்பற்றப்படும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற  புகாரும் கூறப்பட்டது.

பிப்.15-ஆம் தேதி முதல் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த சசிகலா, உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்து சென்னையில் தனது சகோதரியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  கணவர் நடராஜனை பார்த்து வந்தார். பிறகு பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்ட நிலையில், சசிகலா மௌன விரதத்தை அனுஷ்டிப்பதாக தினகரன் கூறினார். தொடர்ந்து 2 மாத காலத்துக்கும் மேல் மௌன விரதம் இருந்து வந்த சசிகலா சமீபத்தில் மௌன விரதத்தை முடித்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் உண்டான பரபரப்பு, சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்த பிறகு முடிவுக்கு வந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com