முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!

விரைவு ரயில் பெட்டிகளில் சார்ட் ஒட்டும் பணியை மீண்டும் கொண்டு வர பயணிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மார்ச் 1 முதல் சார்ட் ஒட்டும் முறை நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!


சென்னை: விரைவு ரயில் பெட்டிகளில் சார்ட் ஒட்டும் பணியை மீண்டும் கொண்டு வர பயணிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மார்ச் 1 முதல் சார்ட் ஒட்டும் முறை நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வேயின் மூத்த அதிகாரி ஷெல்லி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மார்ச் 1ம் தேதி முதல் ரயில்வே மண்டலங்களில் 6 மாதங்களுக்கு ஏ1, ஏ, பி பிரிவு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, சேலம், ஈரோடு, திருச்சி, நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், விழுப்புரம், தாம்பரம், கோவை, சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்டிரல், செங்கல்பட்டு, ராமேஸ்வரம், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகையான விரைவு ரயில்களிலும் இனி சார்ட் ஒட்டப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி சென்னை சென்டிரல் மற்றும் புது தில்லி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டும் பணியை சோதனை முறையில் நிறுத்தியதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பயணிகள் தரப்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து நாகப்பட்டினம் ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜி. அரவிந்த் குமார் கூறுகையில், ஐஆர்சிடிசி அல்லது செல்போன் செயலி வாயிலாக ஆர்ஏசி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, அந்த டிக்கெட் உறுதி செய்யப்படும் போது, பயணியின் செல்போனுக்கு உறுதி செய்யப்பட்டதற்கான எஸ்எம்எஸ் மற்றும் பெர்த் நம்பரும் வரும். ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ஆர்ஏசி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டதற்கான கோடு 'CNF' என்பது மட்டுமே வரும். ஆனால் பெர்த் எண் வராது. எனவே பயணி ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகரையும் சென்று கேட்கும் நிலை ஏற்படும். இதனால் பயணிகளின் ரயில் பயணம் என்பது கெட்ட கனவாகிவிடும் என்கிறார்.

வயதான பயணிகள் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பலருக்கும் தங்களது செல்போனை அன்-லாக் செய்து மெசேஜை படிக்கத் தெரியாது. இதனால் ஆர்ஏசி டிக்கெட்டை எடுத்திருந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலையே ஏற்படுத்தும் என்கிறார்கள் பயணிகள்.

எனவே, காகிதம் இல்லாத டிஜிட்டல் முறைக்கு மாறுவது என்பதை சற்று சிந்திக்க வேண்டும். இன்னும் அந்த அளவுக்கு நமது மக்கள் மாறவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக சார்ட் ஒட்டும் பணியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com