ஆற்று நீரை இறைத்து சம்பா பயிரைக் காப்பாற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள்!

காவிரியில் நீர்வரத்து நிறுத்தப்பட்டதால், டெல்டா பாசப் பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்று நீரை மோட்டார் மூலம் இறைத்து,
தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டி பகுதியில் சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கு ஆற்றில் தேங்கிய நீரை இறைப்பதற்காகக் கல்லணைக் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்ப்செட். 
தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டி பகுதியில் சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கு ஆற்றில் தேங்கிய நீரை இறைப்பதற்காகக் கல்லணைக் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்ப்செட். 

காவிரியில் நீர்வரத்து நிறுத்தப்பட்டதால், டெல்டா பாசப் பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்று நீரை மோட்டார் மூலம் இறைத்து, காய்ந்து வரும் சம்பா பருவ நெற்பயிரைக் காப்பாற்றும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவுக்குத் தண்ணீர் இல்லாததால், மிகக் கால தாமதமாக அக்டோபர் 2 -ஆம் தேதி பாசனத்துக்காக அணைத் திறக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிப் பணிகளும் தாமதமாகத் தொடங்கப்பட்டன. பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், காவிரி நீரை எதிர்பார்க்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது. ஆனால், காவிரி நீர் வரத்து குறைவாக இருந்ததால் பல இடங்களில் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 28 -ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.
ஆனால், டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் கதிர்விட்ட நிலையிலும், அறுவடைப் பருவத்தை எட்டி வரும் தருணத்திலும் உள்ளன. காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் அறுவடைப் பருவத்தை நெருங்கும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
டேங்கர் லாரி தண்ணீர்: பல இடங்களில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து வயலில் பாய்ச்சி பயிர்களை காப்பாற்றும் அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர். கல்லணைக் கால்வாய் தலைப்புப் பகுதியில் கரையோரம் உள்ள விவசாயிகள், ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரை வாடகை மோட்டார் பம்ப்செட்களை கொண்டு இறைத்து வயலுக்குப் பாய்ச்சும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர் அருகே ஆலக்குடி, குருவாடிப்பட்டி, வைரப்பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பருவ நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து குருவாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி எஸ். சித்ரவேல் கூறியது: இப்பகுதியில் பிபிடி ரக நெல் பயிரிட்டுள்ளோம். நூறு நாட்கள் கடந்த இப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வரை செலவு செய்துள்ளோம். இப்பயிர்களுக்கு இன்னும் இருமுறை தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வராததால், மிகுந்த சிரமத்துக்கு இடையிலும் ஆற்றுக்குள் மோட்டார் பம்ப்செட்டை வைத்து நீர் இறைத்து பயிர்களைக் காப்பாற்றி வருகிறோம். இதற்காக ஒரு மணி நேரத்துக்கு டீசல் தொகை உள்பட ரூ. 210 செலவாகிறது. கரையோரம் உள்ள வயலுக்குக் குறைந்தது 5 மணி நேரமாவது நீர் பாய வேண்டும். இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது என்றார் சித்ரவேல்.
ஆற்றில் இருந்து வயல் உள்ள பகுதி தொலைவில் இருந்தால் நீரை இறைப்பதற்கான நேரமும் அதிகரிக்கிறது. இதனால், 10 முதல் 15 மணி நேரம் வரை நீரை இறைக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர் என்றார் அவர்.
இதுகுறித்து விவசாயி சண்முகம் கூறியது: இந்த சம்பா பருவத்தில் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம் என பயிரிட்டோம். ஆனால், 10 நாட்களாகத் தண்ணீர் வராததால் பயிர்கள் காய்ந்தன. அறுவடைக்குத் தயாராகி வரும் பயிருக்கு இதுவரை ஏக்கருக்கு 15 மணிநேரம் வீதம் இருமுறை ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் நீர் இறைத்துப் பாய்ச்சினோம். இதற்கே கூடுதலாக ரூ. 4,500 செலவானது. இதேபோல், மேலும் ஒரு முறை தண்ணீர் இறைத்து பாய்ச்சினால்தான் பயிரைக் காப்பாற்ற முடியும் என்றார் சண்முகம்.
ஆற்றில் தண்ணீர் வராத நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் நெற் பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிமாகக் காணப்படுகிறது. இதனால், மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. கடைசி கட்டமாக ஆற்று தண்ணீரை இறைத்து, கூடுதல் செலவு செய்து சாகுபடி செய்தாலும், லாபம் கிடைக்குமா என்ற கலக்கத்தில் உள்ளனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com