ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஊழல் நடைபெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஊழல் நடைபெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகள் விளை பொருள்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் சென்று கொள்முதல் செய்வது வழக்கம். பதிவு செய்யப்பட்ட வணிகர்களிடமிருந்து ஒவ்வொரு விளைபொருள்களுக்கும் கொள்முதல் விலைப்புள்ளிகள் பெறப்பட்டு, அவற்றில் அதிகபட்ச தொகை கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும். 
ஆனால், இங்கு தான் விவசாயிகளைச் சுரண்டும் செயல் தொடங்குகிறது. வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைவான கொள்முதல் விலையைக் குறிப்பிடுவதால் விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை. 
விவசாயிகளின் விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சாக்குகளில் மாற்றி விற்பனைக்காக வைக்கவும், எடையிட்டுக் கொடுக்கவும் கூலித் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றாலும், கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. பணம் தர மறுக்கும் விவசாயிகளின் விளைபொருள்களின் எடையைக் குறைத்து பதிவிடுகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு உரிய பணத்தைக் கொடுப்பதிலும் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுகிறது. 
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உடனடியாக இந்த ஊழல்களைத் தடுக்கவும், விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட வேண்டும். ஊழலைத் தடுக்க எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com