சேலம் உருக்காலை தனியார்மயமாக்கலைத் தடுக்க பேரவையில் தீர்மானம்: பாதுகாப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதைத் தடுக்க சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சேலம் உருக்காலை பாதுகாப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து 5-ஆவது கேட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து 5-ஆவது கேட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதைத் தடுக்க சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சேலம் உருக்காலை பாதுகாப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
சேலம் உருக்காலை, மேற்கு வங்கம் துர்காபூர் அலாய் உருக்காலை, பத்ராவதி உருக்காலை ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒருபகுதியாக மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அலாய் உருக்காலை விற்பனைக்கான சர்வதேச அளவிலான டெண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, துர்காபூர் உருக்காலைக்கான சர்வதேச டெண்டர் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடக் கோரியும், சேலம் உருக்காலை பாதுகாப்புக் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் உருக்காலையின் 5-ஆவது கேட் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதுகுறித்து, சேலம் உருக்காலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் கூறியது:
மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அலாய் உருக்காலையைத் தொடர்ந்து, சேலம் உருக்காலை மற்றும் பத்ராவதி ஆலைக்கான டெண்டர் விரைவில் வெளியாக உள்ளன.
துர்காபூர் அலாய் உருக்காலைக்கான டெண்டர் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கலில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டும். கடந்த 2000-2001 ஆம் ஆண்டில் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முயற்சி நடந்த போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தடுத்து நிறுத்தினார்.
அதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட முயற்சி எடுக்க வேண்டும்.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com