தமிழகத்தின் நாட் குறிப்பு: 2017 பிப்ரவரி 14 முதல் இன்று வரை

2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்தடுத்த பரபரப்புகள் தொற்றிக் கொண்டன.
தமிழகத்தின் நாட் குறிப்பு: 2017 பிப்ரவரி 14 முதல் இன்று வரை


சென்னை: 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்தடுத்த பரபரப்புகள் தொற்றிக் கொண்டன.

இந்த பரபரப்புகளின் உச்சமாக, 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து அடுத்தகட்ட பரபரப்புகள் உச்சத்தை அடைந்தன. 

அதன் விவரங்கள்
2017 பிப்ரவரி 14 - சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து. 

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
2017 பிப்ரவரி 15 - அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக டிடிவி தினகரன் நியமிக்கப்படுகிறார்.

2017 பிப்ரவரி 16 - தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்கிறார்.

2017 பிப்ரவரி 18 - நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெறுகிறார்.

2017 மார்ச் 15 - டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

2017 மார்ச் 22 - இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

2017 ஏப்ரல் 10 - ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

2017 ஏப்ரல் 17 - பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைவதற்கு வசதியாக, கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு எடுக்கப்படுகிறது.

2017ஏப்ரல் 25 - இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்படுகிறார்.

2017 ஆகஸ்ட் 17 - மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கவும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்றுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

2017 ஆகஸ்ட் 21 - முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றிணைந்தனர்.


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்படுகிறார். அதிமுகவில் பொதுச் செயலர் என்ற பதவியே நீக்கப்பட்டு, நிரந்தர பொதுச் செயலர் ஜெயலலிதா என அறிவிப்பு வெளியானது.

2017 ஆகஸ்ட் 22 - டிடிவி தினகரனை ஆதரிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கிறார்கள்.

2017 செப்டம்பர் 12 - அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூடி, அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்கிறது.

இதன் மூலம் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது தானாகவே ரத்தாவதாகவும் கூறப்பட்டது.

2017 செப்டம்பர் 18 - தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவிக்கிறார்.

2017 அக்டோபர் 6 - தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுக் கொள்கிறார்.

2017 நவம்பர் 23 - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியினருக்கே இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2017 நவம்பர் 24 - ஆர்.கே. நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

2017 டிசம்பர் 24 - ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

2018 பிப்ரவரி 12 - தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது.

இந்த வகையில், அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் அணியை ஒதுக்குதல், பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைதல் என கட்சியிலும், ஒக்கி புயல் பாதிப்பு, போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் என ஆட்சியிலும் பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றோடு தமிழக முதல்வராக ஓராண்டை நிறைவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com