தமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களை மையம் கொண்டு வீசத் தொடங்கியுள்ள புயல் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. பாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்களைத் தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 23 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அந்தப் பணிகளை வகிக்க தகுதி பெற்றவர்கள் கிடையாது. தகுதியிலும், அனுபவத்திலும் இவர்களை விட பல மடங்கு சிறந்த பலர் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களை ஒதுக்கிவிட்டு, இவர்கள் நியமிக்கப்பட காரணம் ஊழல்... ஊழல் மட்டுமே. அதேபோல் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிப்பதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் பாஸ்கரன் மீது கடந்த இரு ஆண்டுகளாகவே ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை; பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிறார் ஆகியவை தான் அவர் மீதான முதன்மை குற்றச்சாற்றுகள் ஆகும். அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன. பல்கலைக்கழகங்களில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்கள் மட்டுமே பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆனால், இத்தகைய தகுதிகள் எதுவும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் 6 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியர் நிலையில் பணியாற்றிய ஒருவருக்கு தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளனர்.

பணியாளர்கள் நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நியாயம் கேட்கச் செல்பவர்களிடம், ‘‘ரூ. 3 கோடி பணம் கொடுத்து தான் துணைவேந்தர் பதவியை வாங்கியுள்ளேன். கொடுத்த பணத்தை நான் எடுக்க வேண்டும். பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் வேலை கொடுப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது ’’ என்று துணைவேந்தர் பாஸ்கரன் வெளிப்படையாகவே கூறுவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாற்றி வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக அதன் துணைவேந்தர் கணபதி கையும், களவுமான கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பற்றியெல்லாம் அச்சப்படாமல் கையூட்டை ஒருவர் வாங்கிக் குவிக்கிறார் என்றால், அதற்கான துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை. துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருகின்றனர். அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொலைதூரக்கல்வி முறையில் விடைத்தாள்களில் திருத்தம் செய்து கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கு தனியாக லஞ்சம், பகுதி நேரப் படிப்பில் எம்.பில் ஆய்வுப் பட்டம் வழங்குவதற்கு லஞ்சம் என மிகப்பெரிய அளவில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரியுள்ளனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.

தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டுமின்றி அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இது தான்  நிலையாகும். பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும். எனவே, இந்த  இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com