நாளை மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமை (பிப்.16) வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்
நாளை மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமை (பிப்.16) வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மின் ஊழியர்களுக்கு கடந்த 2015 டிச. 1 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இன்று வரை காலதாமதமாகிறது. இதனால் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சிஐடியு, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இந்த அறிவிப்பு வெளியானதும், கடந்த மாதம் 22-ஆம் தேதி தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிப்.12-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளாமல் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்கவில்லை. இதையடுத்து, 16-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளை அடுத்து வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பேச்சுவார்த்தை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தொழிலாளர் நலத்துறை புதன்கிழமை அறிவித்தது. இதையடுத்து, திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியது: கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, மின்சார வாரியத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வலியுறுத்தப்பட்டது. அப்போது, பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 
இதனால் ஜன.23-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.
பிப்.12-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது, பேச்சுவார்த்தையின் இடையிலேயே மின்வாரிய அதிகாரிகள் வெளியேறினர்.
இருப்பினும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டதை அடுத்து பிப்.15-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டோம்.
ஆனால் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நிர்வாகக் காரணத்துக்காக அடுத்த 15 நாள்களுக்கு பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறோம்.
எனவே நாங்கள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்போராட்டத்தை தொடர்வது குறித்து அன்றைய தினமே முடிவு செய்வோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com