புதுவை கிராமங்களில் ஆங்கிலக் கல்வி, மருத்துவ வசதி : அமெரிக்கத் தூதரகத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை

புதுவை மாநில கிராமங்களில் ஆங்கிலக் கல்வி, மருத்துவ வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி
அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டருக்கு சிதம்பரம் நடராஜர் சிலையை பரிசாக வழங்குகிறார் முதல்வர் வே.நாராயணசாமி.
அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டருக்கு சிதம்பரம் நடராஜர் சிலையை பரிசாக வழங்குகிறார் முதல்வர் வே.நாராயணசாமி.

புதுவை மாநில கிராமங்களில் ஆங்கிலக் கல்வி, மருத்துவ வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார். 
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக அண்மையில் நியமிக்கப்பட்ட கென்னத் ஜஸ்டர் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர்கள், ஆளுநர்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், புதுவை முதல்வர் நாராயணசாமியை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். 
இந்தச் சந்திப்பு குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய அமெரிக்கத் தூதராக பொறுப்பேற்றுக் கொண்ட கென்னத் ஜஸ்டர், புதுச்சேரி வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நல்லுறவு உள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவது, சர்வதேச நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், புதுவை மாநிலம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளார். மாநிலத்தில் நிர்வாக ரீதியாக எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் வந்துள்ளார். 
கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்டம்-ஒழுங்கு, மக்கள் நலத் திட்டங்கள், தொழில் மேம்பாடு ஆகியவற்றில் முக்கியக் கவனம் செலுத்தி வருகிறோம் என்பதைத் தெரிவித்தோம். 
புதுவை உயர் கல்வியில் தேசிய அளவில் 5-ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியதையும் தெரிவித்தோம். 
புதுவையில் ஆங்கில வழிக் கல்வி அளிக்க ஒத்துழைப்பு தருவதாக அமெரிக்கத் தூதர் உறுதியளித்தார். மேலும், மருத்துவத்தில் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் இசைவு தெரிவித்தார். இதுதவிர, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாநில தலைமைச் செயலர் தலைமையிலான அதிகாரிகள் குழு, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தொடர்பு கொள்ளும். அமெரிக்கத் தூதரகம் மூலம் புதுவை கிராமங்களில் தரமான ஆங்கில வழிக் கல்வி, மருத்துவ வசதி கிடைக்க உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.
பிரதமர் மோடி வரும் 24-ஆம் தேதி புதுச்சேரி வர உள்ளதாகக் கடிதம் வந்துள்ளது. புதுச்சேரிக்கு வரும் மோடியை சந்திக்க முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அனுமதி தரும்படி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார் அவர். 
முன்னதாக, முதல்வரைச் சந்தித்த பிறகு, வெளியே வந்த அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியை சுற்றிப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக வந்தேன். ஆளுநர், முதல்வரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னென்ன பணிகளில் இணைந்து செயல்பட்டு, மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசித்தோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com