பெண் பொறியாளரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கு: 6 பேரிடம் விசாரணை: மொபெட் மீட்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பெண் பொறியாளரை கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பெண் பொறியாளரை கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பொறியாளரின் மொபெட்டை போலீஸார் செம்மஞ்சேரியில் மீட்டுள்ளனர்.
சென்னை அருகே நாவலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், திங்கள்கிழமை நள்ளிரவு பணி முடிந்து, தனது மொபெட்டில் பெரும்பாக்கத்தில் வசிக்கும் தனது சகோதரியை பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார். 
அவர் தாழம்பூர்-பெரும்பாக்கம் சாலையில் மேடவாக்கம் அரசன் கழனி பகுதியில்
செல்லும்போது, யாரோ சிலர் அப்பெண்ணை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி, அவரது செல்லிடப்பேசி, 4 பவுன் தங்க நகை, மொபெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த அந்த பெண், பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மொபெட் மீட்பு: தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் மொபெட் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்த மொபெட்டை புதன்கிழமை மீட்டனர்.
சம்பவம் நடந்த இடம் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் தனியார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், மொபெட் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் 6 இளைஞர்களை போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற நபர்கள் அதை பயன்படுத்துகிறார்களா என்பதையும் சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். நகை, பணத்துக்காக மட்டும் அப்பெண் தாக்கப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com