"மக்கள் நலம் பெற மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் தேவை': முன்னாள் எம்பி. பீட்டர் அல்போன்ஸ்

மக்கள் நலமுடன் வாழ மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்பி. பீட்டர் அல்போன்ஸ் பேசினார். 
"மக்கள் நலம் பெற மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் தேவை': முன்னாள் எம்பி. பீட்டர் அல்போன்ஸ்

மக்கள் நலமுடன் வாழ மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்பி. பீட்டர் அல்போன்ஸ் பேசினார். 

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் அர.சக்கரபாணி, பெ.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: இந்திய அளவில் தமிழகம் சார்பில் தான் அதிகமான வருமான வரி, கலால் வரி செலுத்தப்படுகிறது. ஆனால், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது தமிழகம்.

ஆனால், இன்றைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு மூலம் நமது இளைஞர்கள் அங்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20ஆயிரம் கோடி நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனை வற்புறுத்தி கேட்டு பெறுவதற்கான துணிச்சல் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. 

வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பாஜக தனது மதவாத கொள்கைகளை புகுத்த முயற்சிக்கிறது. அதனை நாம் தடுக்கத் தவறினால், தமிழ்மொழி, இனம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க முடியாத நிலை உருவாகும். மக்கள் நலம் பெற, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.

இதில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுக ஆட்சியின் போது போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டபோது கூட, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வில்லை. ஆனால், இன்றைக்கு ஆட்சியில் உள்ள அதிமுக, மக்களைப் பற்றி சிந்திக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில்  மே மாதம் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். ஆர்.கே.நகரில் ரூ.20 நோட்டைப் பார்த்து ஏமாந்த மக்கள், இனி விழிப்புடன் இருப்பார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, அப்துல்கனிராஜா (காங்.), செல்வராகவன் (மதிமுக), சந்தானம் (இ.கம்யூ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com