ரஜினி, கமல் தனித்தனியே ஆலோசனை: அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம்

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ரஜினி, கமல் தனித்தனியே ஆலோசனை: அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம்

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் ரஜினி, கமல் இருவருமே ஒரே நேரத்தில் அரசியலில் களம் காண இருக்கின்றனர். இதற்காக இருவருமே தயாராகி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ஆம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கவுள்ளார். 
நடிகர் ரஜினிகாந்த் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) கட்சியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக இருவருமே ஆரம்ப கட்டப் பணிகளை துவங்கியுள்ளனர். 
ரஜினிகாந்த் ஆலோசனை: நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகளை அறிவிப்பதற்கான பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக வேலூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
மீதமுள்ள மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று கூட்டம் நடத்துவது சிரமம் என்பதால், சென்னைக்கே மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கலந்து ஆலோசித்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன் படி புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முதல் நாளான புதன்கிழமை திருச்சி உள்ளிட்ட சில மாவட்ட ரசிகர்களுடன் ஆலோசனை நடந்தது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் உள்ளிட்டோர் மாவட்ட ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதன் விவரங்களை நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். இது போல் அடுத்து வரும் இரு நாள்களுக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவை வைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை அறிவிக்கவுள்ளார் ரஜினிகாந்த். 
வழக்குரைஞர்களுடன் கமல் ஆலோசனை: நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்தை வரும் 21-ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து தொடங்குகிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து கட்சிப் பெயரை அறிவித்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகின்றன.
கட்சிப் பெயர் பதிவு: தனது கட்சிப் பெயரை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சினிமாவில் இருந்து விலகலா? கமல் விளக்கம்
சினிமாவிலிருந்து விலகப் போவதாக வந்த தகவலை நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:
அரசியல் கட்சி தொடங்கப் போவதால், சினிமாவில் இருந்து விலகப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. வரும் 21-ஆம் தேதி எனது அரசியல் பயணத்தை ராமேசுவரத்தில் இருந்து தொடங்குகிறேன். 
அன்றைய தினமே கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். பின்னர் அன்று மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நான் பேச உள்ளேன். சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த தகவலில் உண்மை இல்லை. சினிமாவில் இருந்து ஒதுங்குவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com