ராகுல்காந்தியை எதிர்த்து கேள்வி எழுப்புவதா?: திருநாவுக்கரசர் - விஜயதரணி இடையே மோதல் வலுக்கிறது

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதரணி கேள்வி எழுப்புவதாக என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
ராகுல்காந்தியை எதிர்த்து கேள்வி எழுப்புவதா?: திருநாவுக்கரசர் - விஜயதரணி இடையே மோதல் வலுக்கிறது

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதரணி கேள்வி எழுப்புவதாக என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தலைமைக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, சென்னை சத்தியமூர்த்திபவனில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறக்கும் நிகழ்ச்சியை திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், படம் திறக்கப்பட்டதற்கு விஜயதரணி வரவேற்பு தெரிவித்தார். இது தொடர்பாக அகில இந்திய தலைமைக்குத் தெரிவிக்கப்படும் என முதலில் தெரிவித்தேன். ஆனால், அதன்பிறகும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது ராகுல்காந்தி போய் பார்க்கவில்லையா? ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் ராகுல்காந்தி பங்கேற்கவில்லையா? என்றெல்லாம் விஜயதரணி கேள்வி எழுப்பியுள்ளார். முகுல் வாஸ்னிக்கும், நானும் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வுகள் நடந்த போதெல்லாம் தீர்ப்பு வரவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகுதான் தீர்ப்பு வந்தது. அகில இந்திய தலைவரான ராகுல்காந்தியை சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கும் விஜயதரணி எப்படி கேள்வி எழுப்பலாம்? இது வரம்பை மீறிய செயலாகும். 
அதனால், அவர் அளித்த பேட்டி விவரம் குறித்து ராகுல்காந்தி மற்றும் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக மூழ்கும் கப்பல். அதில் யாரும் ஏற மாட்டார்கள். அரசு திட்டங்கள் அனைத்தும் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்குத்தான் கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பதைக் கண்டிக்கிறேன். இந்திய ராணுவத்தின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ராணுவத்தினரை விமர்சிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
முன்னதாக, தமாகாவில் இருந்து பிரிந்து பலர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸில் சேர்ந்தனர். 
முன்னாள் தலைவர் குமரி அனந்தன், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கேள்வி எழுப்பவில்லை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்காந்தியை நான் கேள்வி எதுவும் எழுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொறடா விஜயதரணி கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவுக்கு வரவேற்பு தெரிவித்த விஜயதரணி, ராகுல்காந்தியை எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்று சு.திருநாவுக்கரசர் காட்டமாகக் கூறியதுடன், அது தொடர்பாக தில்லி தலைமைக்கும் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயதரணி கூறியது:
அகில இந்திய தலைமையையோ, ராகுல்காந்தியையோ நான் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவின் உடல்நலம் தொடர்பாக மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார் என்றும், இறுதிச் சடங்கில் பங்கேற்றார் என்றும் ராகுல்காந்தியின் பண்பைப் பாராட்டித்தான் பேசினேன். 
கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில்தான் ஜெயலலிதாவைப் பார்க்க ராகுல்காந்தி வந்தார். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியின் படங்களை ஜெயலலிதா அவருடைய மேஜையில் எப்போதும் வைத்திருந்தார். பிரதமர் நரேந்திரமோடி வந்தபோதுகூட அந்தப்படங்களை ஜெயலலிதா எடுக்காமல் துணிச்சலுடன் செயல்பட்டார் என்பதைப் பார்க்க வேண்டும். 
எனவே, கடந்த காலத்தையும் பார்க்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரும் கடந்த காலத்தை மறக்காமல் அவர் மதிக்கும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். இதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருநாவுக்கரசர் சரியாகச் செயல்படவில்லை எனக் கூற முடியுமா? ஜெயலலிதா பட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி என்னிடம் விளக்கம் கேட்பார். நான் அளிக்கும் விளக்கத்தை நிச்சயம் அவர் ஏற்பார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com