காவிரி வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா?: கவிஞர் வைரமுத்து கேள்வி! 

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா?: கவிஞர் வைரமுத்து கேள்வி! 

சென்னை: காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர்.

காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 284.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பா? தீர்வா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது

தீர்ப்பா? தீர்வா? நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்; நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்; எதிர்கொள்வது மறுபுறம். என்ன செய்யப் போகிறோம்?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com