காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம்: முதல்வர் பழனிசாமி

காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம்: முதல்வர் பழனிசாமி

காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் மேலும் கூறியதாவது:
காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெறுவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காகப் போராட்டம் நடத்தி, ஒரு வழியாக அது வெளியானது. 
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக் கிடைத்துள்ளது. இதில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும், சில ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.
நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், தற்போது 14.75 டி.எம்.சி. குறைவாக, அதாவது 177.25 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அதேசமயம், நதிகள் எந்த மாநிலத்துக்கும் சொந்தமானவை அல்ல, அவை தேசியச் சொத்து. தமிழக பாசனப் பரப்பு 24 லட்சம் ஏக்கர் என்பது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடுத்திருந்த நிலையில், தற்போதைய தீர்ப்பின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம், நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்றும், இவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதையும் வரவேற்கிறோம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும், உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டிருப்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான தேவை இருக்காது. 
இருப்பினும், பல்வேறு கட்சித் தலைவர்களும் மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதால், தீர்ப்பை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் முடிவு செய்வோம்.
இந்த விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தும் அவசியம் இல்லை. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், அந்த உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
மின்வாரிய ஊழியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சர், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என்றார்.
முன்னதாக கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் த.ந.ஹரிஹரன், காவல் ஆணையர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், ஐ.ஜி. பாரி, காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com