சென்னை மாநகராட்சிப் பூங்காவில் ஒட்டப்பட்ட விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்த கலைஞர்கள்

கடற்கரை, விளையாட்டு அரங்கம், பூங்காக்கள், இதர பொது இடங்கள்தான் நடனக் குழுவினர் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடம்.
சென்னை மாநகராட்சிப் பூங்காவில் ஒட்டப்பட்ட விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்த கலைஞர்கள்


சென்னை: கடற்கரை, விளையாட்டு அரங்கம், பூங்காக்கள், இதர பொது இடங்கள்தான் நடனக் குழுவினர் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடம்.

ஆனால், தற்போது சென்னை மாநகராட்சி பூங்காக்களில் நடனக் குழுவினர் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாக பூங்கா வாயில்களில், கேமரா, கும்பலாக எதையாவது செய்தல் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும். 

ஆனால், அண்ணாநகர் டவர் பூங்கா வாயிலில் மாட்டப்பட்டிருக்கும் அறிவிப்பில், பூங்காவில் டிஜிட்டல் கேமரா, ஸ்டான்ட் கேமரா அனுமதியில்லை. மற்றும் நடனக் குழுவினர், இசைக் கருவிகளுக்கும் அனுமதியில்லை. மீறினால் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு முதல் இந்த அண்ணாநகர் டவர் பூங்காவில் தான் நாங்கள் தினமும் பயிற்சி செய்கிறோம். எங்களைப் போன்று பலரும், டிரம்ஸ் கலைஞர்களும் இங்கேதான் பயிற்சி செய்வார்கள் என்கிறார் ஹிப் ஹாப் நடனக் கலைஞர் கார்த்திக்.

இங்கே பயிற்சி செய்யும் போது பலரது அறிமுகம் கிடைத்தது. திருமணங்களில் வாசிக்கவும், சில சினிமாக் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பூங்காவுக்கு வருவோருக்கும் இந்த இசையால் உற்சாகம் கிடைத்தது. இதனால் பலரும் எங்களுக்கு நண்பர்களாயினர். 

வீட்டில் ஸ்டுடியோ வைக்க முடியாத பலருக்கும் இதுபோன்ற பூங்காக்கள் தான் அடைக்கலம் தந்தன. 

ஆரம்பத்தில் நடனமாடி பயிற்சி எடுத்த போது பெற்றோர் தடுத்தனர். படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்கள். அப்போது இதுபோன்ற பூங்காக்களில் வந்து பயிற்சி எடுத்து இப்போது நடனப் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன் என்கிறார் தினேஷ் குமார் என்ற கலைஞர்.

பொது இடங்களை பயன்படுத்துவது எங்கள் உரிமை. யாருக்கும் தொல்லை தராமல் எங்கள் வேலையை மட்டுமே பார்க்கிறோம். சத்தம் அதிகமாக இருப்பதாகக் கூறினால் சத்தத்தைக் குறைத்துக் கொள்ள தயார் என்கிறார் எழில் என்ற இளைஞர்.

அண்ணாநகர் டவர் போன்ற பெரிய பூங்காக்களில் இதுபோன்ற இசைப் பயிற்சிகளால் சில சமயங்களில் தேவையற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியாது. சென்னையில் இருக்கும் அனைத்து பூங்காக்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்கிறார்கள் மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com