காவிரி நீர் அளக்கும் முறையில் திருத்தம் வேண்டும்

தமிழ்நாட்டின் மையத்தில் நெற்களஞ்சியம் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் விவசாயப் பணிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரியாறு
காவிரி நீர் அளக்கும் முறையில் திருத்தம் வேண்டும்

தமிழ்நாட்டின் மையத்தில் நெற்களஞ்சியம் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் விவசாயப் பணிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரியாறு, தற்போது அதன் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு விவாதிக்கப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களைக் கடந்து கடலில் கலக்கும் மாநிலத்தின் பிரதான நதி. 

1924இல் மதராஸ் மாகானத்துக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதி நீர்ப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் போடப்பட்டு, அந்த ஒப்பந்தம் 1974இல் காலாவதி ஆனது. அதன்பிறகு, நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இடைக்காலத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்றம் இந்த 192 டிஎம்சியிலிருந்தும் 14.75 டிஎம்சியைக் குறைத்து, தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி வழங்க அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாக அரசியல்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நீரின் அளவை அளக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரலும் தற்போது முன்பைவிடவும் வலுவாக எழுந்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கும் தண்ணீரின் அளவு, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலு என்ற இடத்தில் அளக்கப்படுகிறது. மத்திய நீர் ஆணையத்தின் அலுவலர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும் இங்கே தண்ணீரை அளக்கிறார்கள். படகு ஒன்றை ஆற்றில் நிறுத்தி நிறுத்தி நகர்த்தித் துல்லியமான தண்ணீர் அளவை அவர்கள் கணக்கெடுக்கிறார்கள்.
இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட போதிருந்தே எழுந்து வருகிறது. 

இதுதொடர்பாக ஒகேனக்கல்லை உள்ளடக்கிய பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ந. நஞ்சப்பன் கூறியது:
'மேட்டூர் வரையிலான காவிரியாற்றில் வடகரை தமிழ்நாட்டு எல்லையாகவும் தெற்குக் கரை கர்நாடக எல்லையாகவும் இருக்கிறது. தண்ணீர் அளவை செய்யப்படும் பிலிகுண்டுலு என்ற இடத்திலிருந்து மேலே சுமார் 70 கிமீ தொலைவு வரையிலும் காவிரியின் மேற்குப் பகுதி தமிழ்நாட்டின் எல்லைதான். 

இந்த மேற்குப் பகுதியிலிருந்து குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் காவிரியில் கலக்கும் சின்னச் சின்ன சிற்றாறுகளின் தண்ணீரும் (தமிழ்நாட்டின் மழைநீர்!) கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீராகத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இது பெரிய தவறு.

ஆனால், காவிரியின் மேற்குக் கரையில் கர்நாடக எல்லைக்குள் இருந்து வரும் மழைநீர், சிற்றாறுகளின் நீர் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு கர்நாடக எல்லைக்குள்ளாகவே பூமிக்குள் நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது.

அதுபோன்ற அமைப்பு தமிழ்நாட்டு எல்லைக்குள் இல்லை!

எனவே, பிலிகுண்டுலுவில் அளவு எடுப்பதை நிறுத்தி, கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி போதுமான உத்தரவுகளைப் பெற வேண்டும். அல்லது, மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகளில் இதனை முன்வைத்து அளக்கும் முறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என்றார் நஞ்சப்பன்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி கூறியது :

'தண்ணீர் அளவை செய்யப்படும் பிலிகுண்டுலுவுக்குக் கீழே, சில இடங்களில் கர்நாடக எல்லையான மேற்குக் கரையில் தண்ணீர் எடுக்கப்படும் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது, கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு கொடுப்பதாக தண்ணீரின் அளவு எடுக்கப்பட்ட இடத்துக்குக் கீழே, இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்குப் பிறகுதான் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் இந்த வேலையை கர்நாடக அரசு செய்தது. இதுபோல கர்நாடகம் எடுக்கும் தண்ணீரின் அளவுகளையும் கழித்துக் கொண்டுதான் நீரின் அளவு கணக்கிடப்பட வேண்டும்' என்றார் சின்னசாமி. 
தண்ணீரின் அளவைக் கணக்கிடும் முறையில் உள்ள இதுபோன்ற நுட்பமான விஷயங்களை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் ஏறத்தாழ 15 முதல் 25 டிஎம்சி வரை நமக்கு சாதகமாகும் என்கிறார்கள் காவிரி விவகாரங்களை உற்றுநோக்கி வரும் சமூக ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com