குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

போரூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலைக் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்


செங்கல்பட்டு: போரூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலைக் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தஷ்வந்தின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்ட 2ம் நிரூபிக்கப்பட்டதாகவும், குழந்தையை கடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்கு 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கொலைக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 363ம் பிரிவு பெற்றோரிடம் இருந்து குழந்தையை கடத்துதல் குற்றத்துக்கு 7 கடுங்காவல் தண்டனையும், குழந்தையை மானபங்கம் செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு தஷ்வந்துக்கு மொத்தம் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சாதாரண பாலியல் குற்றமாகக் கருதாமல், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிக முக்கிய தீர்ப்பாகக் கருதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக நீதித் துறையின் கடும் நடவடிக்கையை மக்களுக்கு உறுதி செய்யும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஹாசினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கண்ணதாசன் கூறினார்.

ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தஷ்வந்துக்கு எதிராக சி.ஆர்.பி.சி.  201, 104, 354, 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

சிறுமி ஹாசினியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கண்ணதாசன், இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தி, தஷ்வந்துக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைத்தார். 

ஹாசினி கொலை வழக்கில் 35 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, 45 வகையான ஆவணங்களும், சிசிடிவி பதிவு உப்பட 19 தடயங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அனைத்து ஆதாரங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். 

தண்டனை குறித்த வாதத்தின் போது தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தஷ்வந்த் வலியுறுத்தியிருந்தார். ஆனால் தஷ்வந்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி வேல்முருகன், அதிகபட்ச தண்டனையை வழங்கினார். 

அப்போது தனது கருத்தைக் கேட்குமாறு தஷ்வந்த் கூறினார். ஆனால் அதற்கு நீதிபதி அனுமதிக்கவில்லை. இதையடுத்து தனது கருத்தை ஒரு கடிதமாக எழுதி நீதிபதியிடம் தஷ்வந்த் வழங்கினார்.

பின்னணி: சென்னையை உலுக்கிய 6 வயது சிறுமி ஹாசினி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி, வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு ஆதரவாக, நீதிமன்றத்துக்கு வெளியே பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com