கேரளத்தில் தமிழர் குழந்தைகள் கல்வி கற்பதில் சிக்கல்: தீர்வு காணுமா தமிழக அரசு?

கேரள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை, ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள நிபந்தனை, அரசுப் பணிக்கு மலையாளம் கட்டாயமாக்கப்படுவது போன்ற பிரச்னைகளுக்கு
குமுளியில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வரும் கேரள அரசு மேல்நிலைப் பள்ளி.
குமுளியில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வரும் கேரள அரசு மேல்நிலைப் பள்ளி.

கேரள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை, ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள நிபந்தனை, அரசுப் பணிக்கு மலையாளம் கட்டாயமாக்கப்படுவது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகாண தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மற்றும் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வரும் பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளப் பகுதிகளில் தற்போது மொத்தம் 202 அரசு தமிழ் வழி தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 48 அரசுப் பள்ளிகள், 58 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 2 சுயநிதி பள்ளிகள் உள்பட 108 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. மேலும், கலை-அறிவியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் சிலவற்றிலும் தமிழ் வழி கல்விப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொழிப்பாடமாக தமிழ் மற்றும் ஆங்கிலமும், அறிவியல், கணிதம் உள்ளிட்ட ஏனைய பாடங்கள் தமிழ் வழியிலும் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில், கேரளாவில் உள்ள தமிழ் வழிப் பள்ளிகளில் படித்து வரும் கேரளம் வாழ் தமிழர் குழந்தைகள் அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். 

ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்: கேரளத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களின் வாரிசுகளுக்கு, கடந்த 1956 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து அங்கு குடியிருந்து வருவதற்கான சான்றின் அடிப்படையிலேயே கேரள அரசு ஜாதிச் சான்று வழங்குகிறது. இதில், ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதற்கான ஜாதிச் சான்றிதழ் பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், இடுக்கி மாவட்டத்தில் இருந்து அருகில் உள்ள தமிழகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து, மீண்டும் அங்கு செல்லும் தமிழர்கள், தமிழகப் பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் புதிதாக குடியேறும் தமிழர்கள், உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க இயலாதவர்கள் ஆகியோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கேரள அரசிடமிருந்து ஜாதிச் சான்றிதழ் பெறுவதிலும், கல்வித் துறை மூலம் சலுகைகள் பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை: இடுக்கி மாவட்டத்தில் உள்ள கேரள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிப்பாடப் பிரிவுக்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததுடன், பெரும்பாலான பள்ளிகள், தமிழ் வழிப்பாடப் பிரிவில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளாகவே செயல்படுகின்றன. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் ஒப்பந்த அடிப்படையிலேயே ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதால், நிரந்தர ஆசிரியர்களின்றி கல்வித் தரம் குறைந்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு உரிய கால இடைவெளியில் நடத்தப்படாததாலும், ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாலும் தமிழ் வழிப்பாடப் பிரிவுகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படுவதாக கேரளப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர் இல்லாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி: தேனி மாவட்டத்தை அடுத்துள்ள குமுளியில் கேரள அரசு சார்பில் செயல்படும் தமிழ் வழிக் கல்வி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை. இதனால் குமுளி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் வழிப்பாடப் பிரிவு ஆசிரியர் ஒருவர், பணி நிரவல் அடிப்படையில் அக்கல்லூரிக்குச் சென்று வருகிறார். மேலும் 44 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 16 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். 

அரசுப் பணியில் சேர்வதில் சிக்கல்: கேரளாவில் அரசுப் பணியில் சேர போட்டித் தேர்வுடன், மலையாள மொழித் தேர்விலும் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆதலால் தமிழ் வழிப் பாடப் பிரிவில் படித்த கேரள வாழ் தமிழர் குழந்தைகள் அரசுப் பணியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கேரளத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை, தற்போது 50 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல் தமிழ் வழிக்கல்வியை தொடர முடியாமல் மலையாளம் மற்றும் ஆங்கில வழி கல்விப் பிரிவில் சேர்ந்தும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விடுதியில் தங்கியிருந்தும் படித்து வருவதாக உடும்பன்சோலையைத் சேர்ந்த கேரளம் வாழ் தமிழர்கள் கூறினர். 

விதி விலக்கு அளிக்கப்படுமா? எனவே கேரளத்தில் உள்ள தமிழ் வழிக் கல்விப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்களை நியமிப்பதுடன், மலையாளம் மற்றும் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் நடைபெறும் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் அல்லது உதவித் தலைமை ஆசிரியராக தமிழ் வழி பாடப் பிரிவு ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிப்பில் தமிழகத்தில் இருந்து கேரளத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் வாரிசுகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள நிபந்தனைகளில் இருந்தும், அரசு வேலை வாய்ப்புக்கு மலையாளம் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்தும், விலக்கு அளிக்க தமிழக அரசு, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது கேரள தமிழ் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com