சிறுகதைகளில் சமகாலப் பிரச்னைகள் பேசப்பட வேண்டும்: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்

சிறுகதைகளில் சமகாலப் பிரச்னைகள் பேசப்பட வேண்டும் என்று தெலங்கானா, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
தினமணி நாளிதழ், எழுத்தாளர் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்றவர்களுடன் (இடமிருந்து)  தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், எழுத்தாளர் சா.கந்தசாமி,  நீதிபதி வெ.ராமச
தினமணி நாளிதழ், எழுத்தாளர் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்றவர்களுடன் (இடமிருந்து) தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், எழுத்தாளர் சா.கந்தசாமி, நீதிபதி வெ.ராமச

சிறுகதைகளில் சமகாலப் பிரச்னைகள் பேசப்பட வேண்டும் என்று தெலங்கானா, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
தினமணி நாளிதழ், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பரிசுகள் வழங்கிப் பேசியது:
ஒன்றைப் பெறுவது மட்டும் வாழ்க்கையல்ல, தருவதிலும் வாழ்க்கை இருக்கிறது. இதுவரை படைப்புகளைப் படைத்துக் கொண்டிருந்த படைப்பாளியான சிவசங்கரி, இன்றைக்கு படைப்பாளிகளைப் படைக்கும் படைப்பாளியாக உருவாகியிருக்கிறார். தமிழ் எழுத்துலகுக்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று.
வாழ்க்கையும், கதையும்: வாழ்க்கையில் இருக்கும் கதை அம்சத்தை நாம் பார்க்கத் தவறினால், கதை அம்சத்தில் இருக்கும் வாழ்க்கையைப் பார்க்க முடியாது. வாழ்க்கையில் பலர் முடிவெடுக்க முடியாத சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவற்றையெல்லாம் கதைகளில் கொண்டு வந்து நிறுத்தும் எழுத்தாளர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்தக் கதைகளும் காலத்தை வென்றுவிடுகின்றன. வேதங்கள், உபநிடதங்கள் என எல்லாவற்றிலும் கதை இருக்கிறது. கதைகளே இல்லாத உலகம் எங்கும் இல்லை. நாம் ஏற்கெனவே போடப்பட்ட பாதையில் செல்ல புதியபுதிய வாகனங்களைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால் பாதைகளைப் போடுவதில்லை. 
சிறுகதைகளில் புதிய பாதை அமைத்தவர்கள்: அன்றைய காலக் கட்டத்தில் பாரதியார், வ.வே.சு. ஐயர், தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்கள் சிறுகதைகளில் புதிய பாதைகளை உருவாக்கிக் காட்டினர். பாரதியார் தனது சிறுகதைகளில் பரிசோதனைகளை மேற்கொண்டார். அவரது நவதந்திரக் கதைகள் வித்தியாசமானவை. ஒரு கதை, அந்தக் கதைக்குள் மற்றொரு கதை என நவதந்திரக் கதைகள் தொடர்ச்சியாகச் செல்லும்.
சமகாலப் பிரச்னைகள் பேசப்பட வேண்டும்: செய்திகளைச் சொல்லாத கதை பயனற்ற கதை என நமது மரபு நம்பியிருந்தது. சிறுகதைகளில் சமகாலப் பிரச்னைகள் பேசப்பட வேண்டும். சமூகத்துக்குப் பயன்படும் விஷயங்கள் இடம் பெற வேண்டும். தமிழ் சிறுகதையின் மிக நீண்ட வரலாறு இலக்கியத்தில் இருக்கிறது. அந்த வரலாற்றை ஒரு சங்கிலி தொடர் போன்று வாழையடி வாழையாக இன்னும் நீட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பணியில் தினமணி நாளிதழ், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் இணைந்திருப்பது பாராட்டுக்குரிய செய்தி என்றார் ராமசுப்பிரமணியன்.
முன்னதாக தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விற்பனைப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் லட்சுமிமேனன் நன்றி கூறினார். இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிவசங்கரி

எனது மிகவும் முக்கியமான கனவு இன்றைக்கு நனவாகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 40 ஆண்டுகளாக மகள் போன்று உடனிருந்த எனது செயலர் லலிதாவுக்குச் சமர்ப்பிக்கிறேன். 
நான் எழுத்துலகில் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆன பிறகு இந்த இலக்கியத்தாய்க்கு ஒரு மணி மகுடம் சூட்ட வேண்டும் என நினைத்துத்தான் "இலக்கியம் மூலம் இந்திய இணைப்புக்காக' இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று பல மொழிகள் சார்ந்த எழுத்தாளர்களைச் சந்தித்து நேர்காணல் செய்தேன். அதை நான்கு தொகுதிகளாக வெளியிட எனக்கு 16 ஆண்டுகள் ஆனது. வரும் ஏப்ரலில் நான் எழுத்துலகில் 50-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறேன். இதை நினைவில் கொண்டு இந்த ஆண்டு முதல் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கியதுதான் தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி. 
இந்தப் போட்டிக்காக வந்த சிறுகதைகளைப் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தளவு புதிய விஷயங்களும், கருத்துகளும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. ஆண்டுதோறும் இந்தச் சிறுகதைப் போட்டி நடைபெறும். எனது காலத்துக்குப் பிறகும் இந்தப் போட்டி நடைபெறும். அதேபோன்று நாவல் போட்டியையும் நடத்த தயாராக உள்ளேன். புதிய எழுத்தாளர்களுக்கு நானும், தினமணியும் உரமாக இருந்தால் எங்களுக்கு அதை விட சிறந்த விஷயம் வேறு இல்லை. இந்தப் போட்டிக்கு எனக்கு உதவியாக இருந்த பத்திரிகையாளர் மாலன், தினமணி நாளிதழ் உள்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சிவசங்கரி.


சா.கந்தசாமி

எழுத்தாளர்கள் என்பவர்கள் பரிசுகளை வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு நிராகரிக்கவும், கொடுக்கவும் தெரியும். 
ஒருமனிதனை, மனிதனாக அறிந்து கொள்ள இலக்கியங்கள் வழிகாட்டுகின்றன. மனிதர்கள் அறிய முடியாத மனதை அவர்களே அறிந்து கொள்ளும் வகையில் யார் எழுதுகிறார்களோ, அவர்கள் எழுத்தாளர்களாக உருவாகிறார்கள். 
எந்த மொழியிலும் நிச்சயமாக அறிவு இருக்க முடியாது. மனிதர்கள் தங்களது அறிவால் அறிந்து ஞானத்தால் செழுமைப்படுத்தியதுதான் மொழிகள். உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருக்கின்றன என்று கணக்கிட்டுள்ளனர். அதில் இரண்டே இரண்டு மொழிகள்தான் இடையறாமல் பேசப்படும் மொழியாகவும், எழுதப்படும் மொழியாகவும் உள்ளன. அதில் ஒன்று தமிழ், மற்றொன்று சீனம். 
இந்த நூற்றாண்டின் இறுதியில் நமது குழந்தைகளுக்கு இந்த மொழியை நாம் வைத்து விட்டுச் செல்வோமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அடுத்த நூற்றாண்டில் இந்திய மொழிகளே இருக்காது என பயமுறுத்துகின்றனர். அவர்களின் கூற்று, ஆராய்ச்சிகள் பொய்த்துப்போக வேண்டும். இளம் தலைமுறையினருக்கு இலக்கியத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும் என்றார் சா.கந்தசாமி.


மாலன்

தலித் இலக்கியம் என்ற சொல் பிரபலமாகும் முன்பே அதற்கென தனிச் சிறப்பிதழ் கொண்டு வந்த பத்திரிகை தினமணி. இதேபோன்று புலம்பெயர்ந்த இலக்கியம் என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதும் தினமணிதான். எனவே இலக்கியத்துக்கும் தினமணிக்கும் பன்னெடுங்காலமாக உள்ள உறவு என்றும் தொடரும். 
எது எழுத்தாளர்களுக்கு மன நிறைவைத் தருமோ அதை அவர்கள் எழுத வேண்டும். மாறாக பெருமையை மட்டும் தருவதை எழுதக் கூடாது. தமிழகத்தில் சிறுகதை எழுதுவது வெகுவாகக் குறைந்து வருகிறது என்ற கவலை மனதில் இருந்து வந்தது. ஆனால் தினமணி நடத்திய இந்தச் சிறுகதைப் போட்டி மூலம் அந்த கவலை நீங்கிவிட்டது. தமிழ் மொழியில் கதை சொல்லும் பாணி இன்னும் வலுவாகவே உள்ளது. அதேபோன்று இந்தப் போட்டியில் பங்குபெற்றோர் அனைவரும் குடும்ப உறவுகளை தற்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு இந்த சிறுகதையை எழுதியுள்ளனர். மேலும் இந்த கதைகள் அனைத்தும் சமகாலத்தை பிரதிபலிப்பவையாக இருந்தன என்றார் மாலன்.

பரிசு பெற்றவர்கள்

முதல் பரிசு (ரூ.50,000)
"கானல் நீர் காட்சிகள்'- என்.சோலையப்பன், 
புதுக்கோட்டை.
இரண்டாம் பரிசு (ரூ. 25,000): 
"அது ஒரு நோன்புக் காலம்'- சித்திக், 
சூளைமேடு, சென்னை.
மூன்றாம் பரிசு (ரூ.15,000): 
"மாசு'- மாலதி சந்திரசேகரன், கிழக்கு தாம்பரம், சென்னை.

ஆறுதல் பரிசு (தலா ரூ.1,000):

1. "பெட்டை'- சி.சரவண கார்த்திகேயன், பெங்களூரு.
2. "கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம்'-  ஆதலையூர் சூரியகுமார், மதுரை.
3. "வாடாமலர் மங்கை'- தேனம்மை லெக்ஷ்மணன், காரைக்குடி.
4. "இன்னுமொரு அம்மா'- எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன்), சென்னை.
5. "ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள்'-  அழகிய சிங்கர், சென்னை
6. "தளை'- பி.ரங்கநாயகி, சென்னை
7. "காணாமல் போகாதவர்'- கொற்றவன், சென்னை
8. "மனிதனும் மனிதமும்'- காரை ஆடலரசன், காரைக்கால்.
9. "பாதரச பந்தங்கள்'- வே.சரஸ்வதி உமேஷ், திருநெல்வேலி.
10. "மழை நின்ற காலத்தில்'- என்.நித்யா, ஈரோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com