சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிப்பு

போரூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிப்பு

சென்னை: போரூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தஷ்வந்தின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமானதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். 

பிறகு தண்டனை குறித்து இருதரப்பினரும் வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

சென்னையை உலுக்கிய சிறுமி ஹாசினி வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி, கடந்த 2017ம் ஆண்டு வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பை முன்னிட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

சம்பவத்தின் பின்னணி: 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி மாலை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி மாயமானார். அவளை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இது குறித்து மாங்காடு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து, அதே குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் தஷ்வந்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், ஹாசினியை அவர் வீட்டுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததையும், அப்போது அவர் கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

மேலும் ஹாசினியின் உடலை பையில் வைத்து எடுத்துச் சென்று அனகாபுத்தூர் பாலத்தையொட்டி இருக்கும் பகுதியில் பையுடன் சேர்த்து ஹாசினியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து, சிறுமி உடல் எரிக்கப்பட்ட இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த்தின் மீதான குண்டர் சட்டம் செப்டம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், காவல்துறை உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து, தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த ஹாசினியின் தந்தை பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது. என் மகளை கொன்றவன் வெளியே வந்தால் பலரை கொல்லவும் தயங்க மாட்டான். அவன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது.

என் மகள் மரணத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் என் மனைவி வெளியே வரவில்லை. குற்றவாளியால் மற்றொரு குழந்தை பாதிக்கப்படலாம். அவன் உயிர் வாழவேக் கூடாது. அவனுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

குற்றவாளியின் தந்தை, என்னிடம் சவால் விட்டுள்ளார், என் மகனை வெளியே கொண்டு வருவேன் என்று சவால் விடுத்துள்ளார். இதற்கு எதிராக இறங்கிப் போராடத் தயார். ஆனால், என் குடும்பத்தின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்று பாபு கலங்கிய மனதோடு கேள்வி எழுப்புகிறார்.

என் குழந்தைக்கு நடந்த கொடூரம் மற்றொரு குழந்தைக்கு நடக்கக் கூடாது. 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்து என்ன பலன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிறையில் இருந்து தஷ்வந்த் வெளியே வந்ததை அடுத்து, அவர்களது பெற்றோர் குன்றத்தூருக்கு இடம் பெயர்ந்தனர்.

சிறையில் இருந்து ஜாமீனில் செப்டம்பர் மாதம் வெளிவந்த தஷ்வந்த் பெற்றோரிடம் செலவுக்குப் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் பெற்றோருக்கும், தஷ்வந்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 2-ஆம் தேதி வீட்டில் இருந்த தஷ்வந்த், தாய் சரளாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் தஷ்வந்த். குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தஷ்வந்தை தேடினர். 

தஷ்வந்துக்கு குதிரை பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் என்பதால் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான கிளப்புகள், ரேஸ் மையங்கள் ஆகியவற்றுக்கு சென்னை தனிப்படை போலீஸார் தகவல் அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மும்பையில் கைது: இந்நிலையில், மும்பை ரேஸ்கோர்ஸில் தஷ்வந்த் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மும்பை சென்ற போலீஸார் தஷ்வந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்த் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டான். தாயைக் கொல்லவா ஜாமீனில் வெளியே கொண்டு வந்தோம் என்று அப்போதே தஷ்வந்தின் உறவினர்கள் அவரைத் தாக்க முயன்றனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை புழல் சிறையில் தஷ்வந்த் அடைக்கப்பட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com