டிஜிட்டல் இந்தியாவெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மேற்கூரை இல்லையே

டிஜிட்டல் இந்தியாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் அதை நோக்கி முதல் படியை எடுத்து வைத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியாவெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மேற்கூரை இல்லையே


டிஜிட்டல் இந்தியாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் அதை நோக்கி முதல் படியை எடுத்து வைத்துள்ளது.

கோவையின் புறநகர்ப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளின் பலகைகளும் டிஜிட்டல் பலகைகளாக மாற்றப்பட்டுள்ளன. 

டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணிக்கும் அதே நேரம், நமது மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகியுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

அதாவது, அந்த டிஜிட்டல் பலகைகளைக் கொண்ட பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான அத்தியாவசிய மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதே அந்த கேள்வி.

உக்கடம் பணிமனையில் 80 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது உடைமைகளை வைத்து, உடை மாற்றும் இடத்தில் ஒன்றே ஒன்று மிஸ்ஸிங். அது மேற்கூரைதான். 

இதற்கு முன்பு, நடத்துநர்கள், ஓட்டுநர்கள் உடை மாற்றிக் கொள்ள உடைமைகளை வைக்க ஒரு சில 'அறைகள்' (சுற்றுச் சுவர்  இல்லாத இடம்) இருந்தது. என்ன அந்த இடம் ஆஸ்பெடாஸ் ஓடுகள் போடப்பட்டிருந்ததால், ஊழியர்கள் தங்கள் உடைமைகளை பாதுகாத்து வைக்கும் டிரங்கு பெட்டிகளுக்கு மழை, வெயிலில் இருந்து அவை பாதுகாப்பு தந்தன.

இது குறித்து ஊழியர்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த பழைய இடம் இடிக்கப்பட்டது. புதிய 'அறைகள்' கட்டும் பணி தொடங்கியது. இந்த பணிகளின் நிறைவாக போக்குவரத்து ஊழியர்களுக்கு இரண்டு அறைகள் (சுற்றுச் சுவர் கொண்டது) கிடைத்தன. என்ன அதில் ஒன்றுக்கு  மட்டுமே மேற்கூரை இருந்தது.

போதிய நிதியில்லாததால், ஒரு அறைக்கு மேற்கூரை அமைக்க முடியவில்லை என்கிறார்கள். மேற்கூரை இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு அறையையும் 80 ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள். தங்களது டிரங்குப் பெட்டிகளை அந்த அறையில் வைத்து மேற்கூரை இல்லாத அறையையே உடை மாற்ற பயன்படுத்துகிறார்கள். மழை காலத்தில் தங்கள் உடைமைகள் அனைத்தும் நனைந்து போவதால், அவற்றை காய வைக்கவே பல மணி நேரம் ஆவதாகவும் கூறுகிறார்கள். இப்படித்தான் கடந்த 4 மாதங்களாக உள்ளது. 

புறநகர் பேருந்துகளில் டிஜிட்டல் பலகைகள் அமைக்க 20 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஊழியர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதியில்லை என்று புலம்புகிறார்கள் ஊழியர்கள்.

இது குறித்து நேதாஜி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அமைப்பின் பொதுச் செயலர் அன்புராஜ் கூறுகையில், உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், எந்த வேலைகளுக்கு எல்லாம் கமிஷன் கிடைக்குமோ அதில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்துகிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com