ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு! 

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் இல்லை என்றுமதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு! 

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் இல்லை என்றுமதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004 பிப்ரவரியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த ஆய்வில் பல அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் இதுவரை நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படாததுடன், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே இங்கு மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கவும், அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடவும், அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பொருள்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்வதற்குத் தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இம்மாதம் 1-ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆதிச்சநல்லூர் ஆய்வு தொடர்பாக ஓய்வு பெற்ற தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் வசதிகளை செய்து தர மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

அப்போது தொல்லியல் பொருள்களை கார்பன் சோதனைக்கு அனுப்புவது குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் சோதனைக்கு அனுப்பினால் மட்டுமே எவ்வளவு காலம் பழமையானது என்பதை சரியாக வரையறுக்க இயலும். ஆனால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருள்களின் காலத்தை அறிவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் செலுத்தவில்லை. 

எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருள்களை  கார்பன் பரிசோதனைக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு அனுப்பினால் அதன் பழமையை வரையறுத்து உறுதி செய்து கொள்ளலாம் என்று  கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி செவ்வாயன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு உண்டா? இல்லையா? என்று கேள்வி எழுப்பி னர்.

அதற்கு மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றால் இது தொடர்பான பணிகளை மாநில அரசின் தொல்லியல் துறை முன்னெடுத்துச் செய்யலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் இதுதொடர்பாக விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com