காவிரி: 22-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வரும் வியாழக்கிழமை (பிப். 22) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி: 22-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வரும் வியாழக்கிழமை (பிப். 22) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு பிறப்பித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வெளியான தினமே "அதனை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லவும், தமிழகத்துக்குரிய காவிரி நதி நீரை முழுமையாகப் பெறவும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகள் விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கப்படும்' என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் நலன்களைத் தொடர்ந்து பேணிக் காக்கவும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டியுள்ளது.
அதற்கு ஏதுவாக, வரும் வியாழக்கிழமை (பிப்.22) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. 
இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைப் பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்கும்.
முதல்முறையாக... கடந்த 2011-இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரை காவிரி நதிநீர் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இப்போது முதல் முறையாக இத்தகைய கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
திமுக கூட்டம் ரத்து: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.23) அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஆனால், தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டதைத் தொடர்ந்து திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

திமுக, இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்பு

தமிழக அரசு சார்பில் 22-இல் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக திமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மேலும், தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அதில் பங்கேற்கும் எனத் தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்:-
மு.க.ஸ்டாலின்: காவிரி நதி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டியிருப்பதை வரவேற்கிறேன். இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும். 
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும்.


விவசாய சங்கங்களுக்கு அழைப்பு?

இந்த நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி பிரச்னைக்காக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 21-ஆம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கும், காவிரி பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விவசாய அமைப்புகளுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டம்

தமிழகத்தில் காவிரி நதிநீர் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிகளை அழைத்து விவாதிப்பது என்ற அணுகுமுறை 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் தமிழகத்துக்கு பல்வேறு பாதகமான அம்சங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இக்கூட்டம் 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-இல் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), ஜி.கே.மணி (பாமக), எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), இல.கணேசன் (பாஜக), வைகோ (மதிமுக), எல்.கணேசன் (வைகோ-செஞ்சி அணி), என்.வரதராஜன் (மார்க்சிஸ்ட்), தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.ரங்கநாதன் (காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தை ஒட்டி, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழக அரசு ஏதேச்சாதிகார முடிவை எடுக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com