காவிரிப் பிரச்னையில் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு தகுதியில்லை: ஓ.பன்னீர்செல்வம்

காவிரிப் பிரச்னையில் அதிமுகவைக் குறை கூற திமுகவுக்குத் தகுதியில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
காவிரிப் பிரச்னையில் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு தகுதியில்லை: ஓ.பன்னீர்செல்வம்

காவிரிப் பிரச்னையில் அதிமுகவைக் குறை கூற திமுகவுக்குத் தகுதியில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக நடுவர் மன்றத்தில் 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று, 2007-இல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த திமுக இதை கிடப்பில் போட்டுவிட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பின்னர் 2011-இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, இக் கோரிக்கை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது சட்டப் போராட்டம் காரணமாகவே, மத்திய அரசின் அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால்தான் காவிரிப் பிரச்னை ஓரளவுக்கு முற்றுப் பெற்றிருக்கிறது. இதில் திமுகவின் பங்கு என்ன இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காவிரிப் பிரச்னை குறித்த வரலாறு தெரியாமல் பேசுகிறார். இப்பிரச்னையில் அதிமுகவைக் குறைகூற திமுகவுக்குத் தகுதியில்லை. 
முதல்வர் பதவியில் இருந்து விலகியது ஏன்?: நான் மறுத்தபோதும் என்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ஏற்க வைத்தனர். கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது, கட்சிக்கும், ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி டி.டி.வி. தினகரன் என்னை முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தினார். ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது பேசுகிறார்.
நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து சிறப்பாகப் பணியாற்றினோம். அதேபோல, ஜல்லிக்கட்டுப் பிரச்னையிலும் பிரதமரைச் சந்தித்து புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற நல்ல பல நடவடிக்கைகள் தொடருவதைப் பொறுக்க முடியாமல் நெருக்கடி கொடுத்ததால் பதவியில் இருந்து விலக நேர்ந்தது என்றார்.
கமல்ஹாசன் கட்சியை, அதிமுக கூட்டணிக்கு அழைப்பீர்களா என்றதற்கு, தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று பதில் அளித்தார்.
மதுரை மக்களவை உறுப்பினர் ஆர். கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம். முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். 
கருத்து வேறுபாடு இல்லை:
இதனிடையே மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com