சிறுமி ஹாசினி கொலை வழக்கு: கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சிறுமி ஹாசினியை கொன்று, தீயிட்டு எரித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்த். (வலது) அவர் வந்த போலீஸ் வாகனம்.
பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்த். (வலது) அவர் வந்த போலீஸ் வாகனம்.

சிறுமி ஹாசினியை கொன்று, தீயிட்டு எரித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கை செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். இவ்வழக்கு விசாரணை நீதிமன்றக் கதவுகள் அடைக்கப்பட்டு ரகசியமாக நடைபெற்றது. இவ்வழக்கில் முக்கிய சாட்சிகளாக 30 பேர் விசாரிக்கப்பட்டனர். 42 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பரபரப்பான இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தஷ்வந்த் மீதான குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி தீர்ப்பை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பின்னர் மாலையில் தீர்ப்பு வழங்கினார். அதில் ஹாசினியைக் கடத்தியது, துன்புறுத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது, சடலத்தை எரித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவித்து அவரைத் தூக்கிலிட உத்தரவிட்டார். 
வழக்கின் விவரம்: சென்னை மாங்காட்டை அடுத்த மெüலிவாக்கம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாபு (35). இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகள் ஹாசினி (6) .
கடந்த 5-2-2017-ஆம் ஆண்டு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹாசினியைத் தேடி வந்தனர். 
விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் குன்றத்தூர் சம்பந்தன் நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்த சேகர்-சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (24 ), சிறுமி ஹாசினியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் கொலை செய்து விட்டு, சடலத்தை துணிப் பையில் திணித்து வெளியே எடுத்துச் சென்று தாம்பரம்-மதுரவாயல் புறவழிச் சாலையில் அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. 
இதுதொடர்பாக மாங்காடு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்து புழல்சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 2-ஆம் தேதி தனது தாய் சரளாவிடம் ரேஸ் விளையாட பணம் மற்றும் பீரோ சாவி கேட்டு மிரட்டினார். அவர் மறுக்கவே தாயைக் கொலை செய்து விட்டு 25 பவுன் நகைகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்று தலைமறைவானார். 
இதையடுத்து தனிப்படை போலீஸார் மும்பை சென்று செம்பூர் ரேஸ்கோர்ஸில் பதுங்கியிருந்த தஷ்வந்தை டிசம்பர் 6-ஆம் தேதி கைது செய்தனர். டிசம்பர் 7-இல் மும்பை நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்தபோது மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர். அப்போது தஷ்வந்த் கைவிலங்குடன் போலீஸாரிடம் இருந்து தப்பிச் சென்றார். கைவிலங்குடன் தஷ்வந்த் தப்பிய புகைப்படங்கள் மும்பையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டன. 
இந்நிலையில் கைவிலங்குடன் ஹோட்டலில் நடமாடிய தஷ்வந்தை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 
அதனையடுத்து மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தேரியிலுள்ள ஹோட்டலில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீஸார் மீண்டும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com