அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறார் கமல்: பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறார்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் நடிகர் கமல்ஹாசன், கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார்.
மதுரை ஒத்தக்கடையில் நடிகர் கமல்ஹாசன் பேசுவதற்காக அமைக்கப்படும் மேடை.
மதுரை ஒத்தக்கடையில் நடிகர் கமல்ஹாசன் பேசுவதற்காக அமைக்கப்படும் மேடை.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் நடிகர் கமல்ஹாசன், கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார்.
சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதுரை வந்த கமல்ஹாசனுக்கு அவரது இயக்கத்தினர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை காளவாசல் சந்திப்பு அருகே உள்ள விடுதியில் அவர், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றார்.
ராமேசுவரத்தில் புதன்கிழமை காலை 7.45 மணிக்கு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்குச் செல்லும் கமல்ஹாசன், அங்கு கலாமின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். பின்னர் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவிக்கிறார். கலாம் படித்த பள்ளிக்குச் சென்று பார்வையிடும் கமல்ஹாசன், அதன் பிறகு மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அதைத்தொடர்ந்து, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். வழியில் 3 இடங்களிலும் அவரது இயக்கத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு கூட்டத்திலும் கமல்ஹாசன் பேசுகிறார்.
அரவிந்த் கேஜரிவால்... மதுரை யா. ஒத்தக்கடையில் வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இதில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறார்.
மதுரைக்கு விமானத்தில் புதன்கிழமை மாலை 4.40-க்கு வரும் கேஜரிவால், அழகர்கோயில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்துக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். இரவு 7.50-க்கு மீண்டும் விருந்தினர் இல்லம் செல்லும் அவர் இரவு தங்கிவிட்டு, வியாழக்கிழமை காலை 7.50-க்கு விமானத்தில் தில்லி செல்கிறார்.
கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து அவரது இயக்கத்தினரும், கமல்ஹாசனுக்கு ஆதரவாக இருக்கும் நடிகர்கள் பலரும் வருகை தருகின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களும் இக்கூட்டத்துக்கு வரவுள்ளதாக கமல்ஹாசனின் இயக்கத்தினர் தெரிவித்தனர். 
கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்துள்ள கமல்ஹாசன், தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும், அவர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கமல்ஹாசனின் இயக்கத்தினர் கூறுகின்றனர். இருப்பினும் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
பொதுக் கூட்டம் நடைபெற உள்ள யா. ஒத்தக்கடை வெளவால் தோட்டம் பகுதி மைதானத்தில் மேடை மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கியப் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் பலரும் வருகை தர உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளனர்.
வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் நிற்கிறேன்
சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: 
எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு ஆசி வழங்கி அனுப்பிய மண்ணுக்கு திரும்ப வந்துள்ளேன். நாளை (புதன்கிழமை) காலை ராமேசுவரத்தில் எனது பயணத்தை தொடங்கி மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எனது கட்சியின் கொள்கைகளையும், சாராம்சத்தையும் அறிவித்து, கட்சி கொடியை ஏற்ற உள்ளேன். பொதுக்கூட்டத்திற்கு மதுரையை தேர்ந்தெடுக்க காரணம் குறித்து கேட்டபோது, மதுரைக்கு நான் முதலில் வரவில்லை. ராமேசுவரத்தில் தொடங்கி பரமக்குடி வழியாக கடைசியாகத் தான் மதுரை வருகிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார்.
முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரது இயக்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து தாரை, தப்பட்டை முழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com