பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்துக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் ரூ.149.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com