'ஏர்செல்' சேவை முடக்கம்: செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு: பல நகரங்களில் முற்றுகைப் போராட்டம்

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஏர்செல் நெட்வொர்க் சேவை திடீரென முடங்கியதால் கோவையில் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் .
ஏர்செல் நெட்வொர்க் சேவை திடீரென முடங்கியதால் கோவையில் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் .

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவன சேவை மையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. செல்லிடப்பேசி புழக்கத்துக்கு வந்த காலத்திலேயே ஏர்செல் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியதால், அதற்கு வாடிக்கையாளர்கள் பெருமளவு குவியத் தொடங்கினர்.
பெருமையை இழந்தது: நாளடைவில் செல்லிடப்பேசி இணைப்பு வழங்கும் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கின. வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிக் குவித்தன. அதேசமயம், 'ஏர்செல்' நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் படிப்படியாக விலகி வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களை நாடத் தொடங்கினர். இதற்கு செல்லிடப்பேசி சிக்னல்கள் கிடைக்காததும் ஒரு காரணம் என வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த ஆனந்த் கூறுகையில், 'பல ஆண்டுகளாக ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்து வந்தேன். கடந்த சில மாதங்களாக செல்லிடப்பேசி சிக்னல் பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டது. இதனால், வேறுவழியின்றி மற்றொரு நிறுவனத்துக்கு எனது எண்ணை மாற்றி விட்டேன்' என்றார்.
பிரச்னையும், ஆர்ப்பாட்டமும்: ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்னை கடந்த சில நாள்களாக உச்சத்தை அடைந்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெளியூர் சந்தாதாரர்கள், கடந்த சில நாள்களாகவே ஏர்செல் இணைப்பில் குறைபாடுகள் இருந்ததாகவும், ஊரகப் பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில் இன்னும் சிக்கல் இருப்பதாகவும் கூறினர்.
சிக்னல் இல்லாத காரணத்தால், ஏர்செல் இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் புதன்கிழமை கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள ஏர்செல் கிளை அலுவலகத்தை நூற்றுக்கும் அதிக வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, கோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை அருகே ஏர்செல் நிறுவனத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பிரச்னை என்ன?: ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல்கள் திடீரென தடைபட்டதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளது. இதனால் சிக்னல் விநியோகம் தடைபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் டவர்களில் 6 ஆயிரத்து 500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.
வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி: ஏர்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் செல்லிடப்பேசி நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த வசதியையும் ஏர்செல் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, ஏர்செல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரினாலும் பதில்கள் கிடைப்பதில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏர்செல் விளக்கம் என்ன?
சிக்னல் கோளாறு, வாடிக்கையாளர்களின் ஆர்ப்பாட்டம் என கடந்த சில தினங்களாக எழுந்து வரும் பிரச்னைகள் குறித்து ஏர்செல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம்:
எங்களது நிறுவனத்தில் இப்போது எழுந்துள்ள பிரச்னைக்காக வருந்துகிறோம். தொழில்நுட்ப ரீதியாக எழுந்துள்ள இந்த சேவை குறைபாட்டைப் போக்கி சிறப்பான சேவை வழங்க சிறிது காலமாகும். எனவே, எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com