காவிரி விவகாரம்: இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

தமிழகத்துக்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழகத்துக்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை (பிப்.22) நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரை, உச்சநீதிமன்றம் 177.25 டிஎம்சி நீராக குறைத்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக முதல்வர் தெரிவித்ததுடன், இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: காவிரி வாரியத்தை உடனடியாக அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் முதல்வர் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் எழுப்ப உள்ளனர்.
ஒரு மனதாகத் தீர்மானம்: காவிரி விவகாரம் தொடர்பாக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com