வழக்கு விசாரணை தினத்தன்று வேறு பணி கூடாது: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு விசாரணை தேதிகளில் வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை தினத்தன்று வேறு பணி கூடாது: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு விசாரணை தேதிகளில் வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமான வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஆஜராகவில்லை. அவர் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்குச் சென்றிருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தகவல் தெரிவித்தார். இதே போன்று மற்றொரு ஆட்கொணர்வு வழக்கிலும் விசாரணை அதிகாரி ஆஜராகவில்லை. அந்த வழக்கிலும் பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் ஆட்கொணர்வு மனுக்கள் உள்ளிட்ட வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளை விசாரணை நாள்களில் எந்தக் காரணம் கொண்டும் வேறு பணிகளுக்கு அனுப்பக்கூடாது. விசாரணை தேதிகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த உத்தரவு இப்போதுள்ள காவல்துறை இயக்குநருக்கு மட்டுமல்ல, வரும் காலங்களில் வருகின்ற காவல்துறை இயக்குநர்களுக்கும் பொருந்தும். இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கு இந்த உத்தரவை டிஜிபி அறிவுறுத்த வேண்டும்' என உத்தரவிட்டனர். 
இதே போன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், 'உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 
ஆனால் விசாரணைக்கு ஆஜராகும் காவல்துறை அதிகாரிகள் போதுமான ஆவணங்களுடன் ஆஜராவதில்லை; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில்லை. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது. உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்கு காவல்துறை அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com