கச்சத்தீவு திருவிழா: அடுத்த ஆண்டு முதல் நாட்டுப் படகில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

கச்சத் தீவு அந்தோணியார் ஆலய விழாவுக்கு, அடுத்த ஆண்டு முதல் மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம் என்று,
கச்சத்தீவு திருவிழா: அடுத்த ஆண்டு முதல் நாட்டுப் படகில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

கச்சத் தீவு அந்தோணியார் ஆலய விழாவுக்கு, அடுத்த ஆண்டு முதல் மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜெ. பிரின்சோ ரைமண்ட், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் தாக்கல் செய்த மனு: கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இத் திருவிழாவில் மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் மோட்டார் படகுகளில் சென்று கலந்துகொள்வது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுகிறது.
மோட்டார் படகில் செல்ல ஒருவருக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். இந்தக் கட்டணத்தைச் செலுத்தாத மீனவர்கள் விழாவுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. மீனவர்கள் தங்களுக்குச் சொந்தமான மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் செல்ல அனுமதி கோரிய மனுவை, மாவட்ட ஆட்சியர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே, கச்சத் தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்துகொள்ள மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் செல்ல மீனவர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் கடல்சீற்றம் நிறைந்த அப்பகுதியில் நாட்டுப் படகில் செல்வது பாதுகாப்பற்றது. இயந்திரப் படகுதான் உகந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், அடையாள அட்டை வைத்துள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மட்டும் அவர்களது படகில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்திய-இலங்கை கச்சத் தீவு ஒப்பந்தத்தின் 5ஆம் ஷரத்துபடி, இந்திய மீனவர்கள் நுழைவு இசைவுச்சீட்டு போன்ற போக்குவரத்து ஆவணங்கள் ஏதுமின்றி கச்சத் தீவு செல்லலாம். இந்த ஆண்டு 24, 25ஆம் தேதிகளில் திருவிழா நடைபெறுவதால், மிகக் குறுகிய காலமே உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு மோட்டர் பொருத்திய நாட்டுப் படகில் மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்ல அனுமதிக்க வேண்டும். என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com