கமல்ஹாசனின் புதிய பயணம்...

கமல்ஹாசனின் புதிய பயணம்...

மதுரையில் பிரம்மாண்ட கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

மதுரையில் பிரம்மாண்ட கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
எனது அரசியல் பயணம் புதிய பாதையில் இருக்கும் என்று கூறி, மாற்றத்துக்கான விதையை விதைத்திருக்கிறேன் என்ற அறைகூவலுடன் அவரது அரசியல் பயணம் தொடங்கியிருக்கிறது. 
ராமேசுவரத்தில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் இல்லத்தில் தொடங்கியதில் அரசியல் இல்லை என்று கூறினாலும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் குடியரசுத் தலைவர் எனப் போற்றப்பட்ட கலாமின் இல்லத்தில் தனது பயணத்தை தொடங்கியது அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்க்கத் தான் என்பதை மறுக்க இயலாது.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்தது முக்கியக் காரணமாக இருந்தது. 
அன்றைய காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
ஆட்சி மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள் நிகழும்போது எதிர்த் தரப்பில் இருக்கும் அரசியல் இயக்கங்கள், புதிய மொந்தையில் பழைய கள் என்ற பழமொழியைக் கூறுவது வழக்கம். தேசிய கட்சிகளான பாஜக-காங்கிரஸ் ஆக இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக-திமுக ஆக இருந்தாலும் பரஸ்பரம் இந்த ஒருவர் மீது ஒருவர் இந்த பழமொழியைக் கூறிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இதிலிருந்து சற்று மாறுபட்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது மக்கள் நீதி மய்யம். அதன் உயர்மட்டக் குழுவில் இருக்கும் நிர்வாகிகளே அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். திரைத் துறையில் கமலுக்கு நீண்டகாலமாக உதவியாக இருந்தவர்களே உயர்மட்டக் குழுவிலும் இடம் பெற்றிருக்கின்றனர். அரசு நிர்வாகம் குறித்த அறிந்து கொள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். 
வழக்கமாக புதிய கட்சிகள் தொடங்கும்போது ஏற்கெனவே இருக்கும் கட்சிகளின் பிரபலங்கள் முன்னிலையில் அறிமுகம் செய்வதை பல கட்சிகளின் தொடக்க விழாக்களில் பார்த்திருக்கலாம். ஆனால், மக்கள் நீதி மய்யம் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என யாரையும் முன்னிறுத்தவில்லை. அதில் புதிய மொந்தையில் பழைய கள் என அரசியல் இயக்கங்களின் விமர்சனங்களில் இருந்து மக்கள் நீதி மய்யம் மாறியிருக்கிறது. தனது திரைப்படங்களில் வித்தியாசத்தைக் காட்டுவதைப் போல, கட்சியின் பெயர், கொடி என அனைத்து அம்சங்களில் மாற்றத்தைக் காட்டியிருக்கிறார்.
அவரது முதல் இலக்காக இருப்பது இளைஞர்கள் தான். அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தது முதல் சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு இருந்ததோ அதற்கு நிகராக எதிர்வினைகள் இருந்தன. முதலில் இளைஞர்களிடம் சென்றுசேர வேண்டுமெனில் இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கின்றன என்பதை கமல் உணர்ந்திருக்கிறார். இளைஞர்கள் விரும்பும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
இலவசங்களைத் தரமாட்டோம் என்பது அரசியல் இயக்கத்தின் புதிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் அவரவர் சுயலாபத்துக்கானவை என்பதை தற்போது பெரும்பான்மையோர் உணரத் தொடங்கியிருக்கின்றனர். சாராயத்தை ஊக்குவிக்க மாட்டோம் என்று கூறி பெண்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறது. இந்த இரு அம்சங்களும் நடுத்தர வயதினரை கவரும் என்பது நாயகனின் நம்பிக்கை.
திராவிட அரசியலை மையப் புள்ளியாக வைத்து அதைச் சுற்றியே தமிழக கட்சிகள் தங்களது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் திராவிடத்தைக் கைவிடாது எனக் கூறியிருக்கிறது.
தனது அரசியல் பயணத்தின் தொடக்கமான மதுரை கமல்ஹாசனுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் பல மதுரையிலிருந்து தொடங்கியிருக்கின்றன. அரசியல் நிகழ்ச்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதுரை எப்போதுமே ஏமாற்றத்தைக் கொடுத்ததில்லை. இதற்கு முந்தைய அரசியல் நிகழ்வுகளும், கமல்ஹாசனின் மதுரை பொதுக் கூட்டமும் அதைத் தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் திரண்டு வந்தனர். கட்சி சாராத இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளனர். 
எது எப்படியோ, இளைஞர்களை ஈர்க்க வேண்டும் அவரது இலக்கிலான அவரது பயணம் தொடங்கியிருக்கிறது. புதிய பாதையில் தனது பயணத் தொடக்கத்திற்கு வந்த கூட்டம் அவரைப் பின்தொடருமா என்பதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தொடர் செயல்பாடுகள் தான் பதில் சொல்ல வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com