காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சியினர் முடிவு 

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குச் சாதகமாக உள்ள அம்சங்களை நிறைவேற்றக் கோரி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர்
காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சியினர் முடிவு 

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குச் சாதகமாக உள்ள அம்சங்களை நிறைவேற்றக் கோரி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளனர். இதற்கான தீர்மானம், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 50 -க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்:
தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை குறித்த காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆறு வார காலத்துக்குள் மத்திய அரசு அமைக்க வலியுறுத்தப்படும்.
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி உத்தரவில், தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்த தண்ணீரின் அளவில் ,14.75 டி.எம்.சி. நீரை குறைத்து, அதனை கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்க வேண்டுமென, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்துக் கட்சி குழு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை விரைவில் நேரில் சந்திப்போம். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தரவும் வலியுறுத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பாக, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது: காவிரி நதிநீர் போன்ற முக்கியமான பிரச்னையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், அனைத்து கட்சியினரும், தமிழக மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒருமித்த கருத்துடன் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றார் முதல்வர்.
தலைவர்கள் கருத்து
காவிரி நதி நீர் பிரச்னையில் அனைத்து கட்சியினரும், தமிழக மக்களுக்காக ஓரணியில் திரள வேண்டும் 
- முதல்வர் பழனிசாமி.


கர்நாடகத்தின் சுயநலப் போக்கினால்தான் காவிரி பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது.
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்ய அனுமதிக்கக் கூடாது
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.


காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்.


காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல் சட்ட அமர்வில் விசாரணை நடத்த வேண்டும்
- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


அதிக அதிகாரம் பெற்ற வாரியம் வேண்டும் 
- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.


தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.
- பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.


தீர்மானங்களை ஒருமனதாக வரவேற்ற அரசியல் கட்சிகள்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களையும் அரசியல் கட்சிகள் ஒருமனதாக வரவேற்றன. தீர்மானங்களுக்கு திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இடதுசாரிகள், பாமக, மதிமுக உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, நடுவர் மன்ற இறுதி உத்தரவில் வழங்கிய நீரின் அளவைக் குறைத்தது ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டுமென அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தின.
கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்' என நம்பிக்கை தெரிவித்தார். அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை எதிரொலிக்கும் வகையில், முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்து காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காலை 10.30 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மாலை 5.15 மணி வரை நீடித்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com