காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தின் சுயநலப்போக்கு நீடிக்கிறது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகத்தின் சுயநலப் போக்கினால்தான் காவிரி பிரச்னை நீடித்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். 
காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தின் சுயநலப்போக்கு நீடிக்கிறது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகத்தின் சுயநலப் போக்கினால்தான் காவிரி பிரச்னை நீடித்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். 
காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியது: காவிரியை முழுவதுமாக தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கர்நாடகத்தின் சுயநலம்தான் காவிரி பிரச்னை உருவாவதற்கே முக்கியக் காரணம். இந்த சுயநலப் போக்கு இன்றுவரை ஒரு சிறிதும் மாறவில்லை என்பதை, அவர்களின் அண்மைக் கால பேச்சுகள் எடுத்துக் காட்டி வருகின்றன.
1892- ஆம் ஆண்டு மற்றும் 1924- ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. ஆனால், இந்த ஒப்பந்த விதிகளைப் பின்பற்றாமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக பல்வேறு அணைக்கட்டுகளைக் கட்டியது. மற்ற மாநில விவசாயிகளின் நலனை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், ஆண்டுக்காண்டு தன்னுடைய விவசாய நிலங்களின் பரப்பையும், கர்நாடகம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுமையாக படித்து சட்ட நிபுணர்களுடனும், துறை சம்மந்தமான அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசு செய்து வருகிறது.
ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாக 6 வாரங்களுக்குள் செயல் திட்டம் வகுத்து காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகம் நமக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள, 177.25 டிஎம்சி தண்ணீரை, எந்தத் தடையும் இன்றி, உரிய காலத்தில் நாம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரில் 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்றும், அனைத்துக் கட்சிகளின் கருத்தின்படியும் நடவடிக்கை எடுத்து காவிரியிலிருந்து வரவேண்டிய தண்ணீரைப் பெற வேண்டும்.
மறுசீராய்வு மனு செய்ய வேண்டும்: சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோல ஏற்கெனவே ஒருமுறை தீர்ப்பு கூறியதுபோது, அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்த முறை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேலாண்மை வாரியம் அமைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்துக்கான 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அது தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மறுசீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்: தமிழிசை செளந்தரராஜன் (பாஜக): காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, பாஜகவே அளித்ததுபோல் பேசுவது தவறு. அந்தப் பார்வை ஏற்புடையது அல்ல. காவிரி விவகாரம் உள்பட தமிழக உரிமைகளைப் பாதுகாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.
சட்ட அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும்: வைகோ (மதிமுக): காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், கர்நாடகத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 18 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டது. ஆனால், கர்நாடகம் தற்போது 22 இலட்சம் ஏக்கர் பாசனம் செய்கிறது. தமிழகத்தின் பாசனப் பரப்பு 1.75 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது.
தமிழகத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது குறித்த வழக்குதான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நிலத்தடி நீரைப் பற்றி அதில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். நடுவர் மன்றம் அறிவித்தபடியும் கர்நாடகம் தண்ணீர் தரவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் நமக்கு அநீதியாக அறிவித்து இருக்கும் இந்த அளவுத் தண்ணீரையாவது கொடுப்பார்களா என்பது சந்தேகமே. எனவே, தமிழக முதல்வர், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்திக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும். கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது. உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அரசியல் சட்ட அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாகத் தமிழகம் முன்வைக்க வேண்டும். 
தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையம் தேவை: ஜி.கே.மணி (பாமக): காவிரி விவகாரத்தில் 40 ஆண்டுகளாக தமிழகம் பல்வேறு வகையில் உரிமைகளை இழந்து வருகிறது. தமிழகத்துக்கான காவிரி நீர் 575 டிஎம்சியாக இருந்து. இன்றைக்கு படிப்படியாகக் குறைந்து 404 டிஎம்சியாக உள்ளது. இதுவரை 171 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மறுசீராய்வுக்கு அனுப்ப வேண்டும். மேல்முறையீடு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் சொல்வதற்கு அதிகாரம் இல்லை. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆணையம் அதிக அதிகாரத்துடன் தன்னாட்சி பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும். இதில் எந்தவித சமரசமும் செய்ய வேண்டாம். 
அதிக அதிகாரம் பெற்ற ஆணையம் தேவை: கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ.): காவிரி விவகாரத்துக்காக 52 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இறுதித் தீர்ப்பு என இத்தனை தீர்ப்புகளைப் பெற்றும் கர்நாடகம் அதை நிறைவேற்ற மறுத்து வருகிறது. மத்திய அரசும் அதன் கடமையை நிறைவேற்றாமல் தட்டிக் கழித்து வருகிறது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் அதிகாரம் பெற்ற ஆணையம் அமைக்க வேண்டும் என்று எதுவும் அழுத்தமாகத் தெரிவிக்கவில்லை. அதனால், பிரதமரைச் சந்தித்து அதிக அதிகாரம் பெற்ற ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும்.
தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன் (விசிக): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து அரசியல் ரீதியாக அனைத்துக் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதையும் கடந்து, மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
தலைவர்களை வரவேற்ற 3 அமைச்சர்கள்
காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்கள் அனைவரையும் காவிரி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் வரவேற்றனர்.
அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் நடைபெற்றது. கூட்டம் காலை 10:30 மணிக்குத் தொடங்கியது. ஆனால் 9.30 மணியளவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். கூட்டத்துக்கு வந்த தலைவர்கள் அனைவரையும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் நாமக்கல் மாளிகையில் கீழ்தளத்தில் நின்று வரவேற்றனர். அமைச்சர்கள் மூவரும் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com