காவிரியால் கரம் கோர்த்த கட்சிகள்!

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தது ஆரோக்கியமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தது ஆரோக்கியமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது.
காவிரி நீரைக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், தமிழக உள்ள அரசியல் கட்சிகளின் முதல் குரல் அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. 11 ஆண்டுகளாக ஆளும் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படாத நிலையில் எல்லாக் கட்சிகளும் நம்பிக்கையற்றே இந்தக் கோரிக்கையை வைத்தன. 
மு.க.ஸ்டாலின் ஒரு படி முன்னே சென்று, திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததுடன், கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.
அரசியல் இல்லை: சட்டப் பேரவையில், காவிரிப் பிரச்னை குறித்து விவாதம் நடைபெறும்போது, தமிழகத்துக்கான உரிமையைத் தாரை வார்த்தது யார் என்பது தொடர்பாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெற்ற விவாதம்தான் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தக் கூட்டத்தில் வரவேற்ற ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை மட்டுமே குறிப்பிட்டு அனைவரையும் ஆலோசனை தெரிவிக்குமாறு கூறியது ஆரோக்கியமாக அமைந்தது.
5 நிமிஷம் வாய்ப்பு: கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், சு.திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, வைகோ, ஜி.கே.மணி, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, கிருஷ்ணசாமி, செ.கு.தமிழரசன், சீமான், சரத்குமார், கே.எம்.காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், கதிரவன் உள்பட 30 கட்சிகளின் தலைவர்களும், 14 விவசாயச் சங்கங்களின் தலைவர்களும், 9 இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு தலைவருக்கும் 5 நிமிஷம் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 
காலை 10.30 மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை 1.30 மணியளவில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தலைவர்கள் தொடர்ந்து கருத்துகளை முன் வைத்ததால் மதியம் 2.30 மணியளவில் மதிய உணவுக்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
மதிய உணவு: அனைவருக்கும் அரசு சார்பில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைவரும் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டார். பிறகு 3 மணியளவில் கூட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
ஆரோக்கியமான கூட்டம்: காவிரி விவகாரம் தொடங்கி அனைத்துப் பிரச்னைகளிலும் ஒவ்வொரு கட்சியும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துக் கொள்வது தமிழக அரசியலில் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆனால், இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் குரலும் ஒரே மாதிரியாகவே இருந்தது. 
காவிரி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து பேசியதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினர். இதே குரலை அரசு வழிமொழிந்து ஒருமனதாக தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. காவிரிக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகள் தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளிலும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com