இறக்குமதி மணலை அனுமதித்தால் கடத்தல் அதிகரிக்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

'இறக்குமதி செய்யப்படும் மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படும்' என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட

'இறக்குமதி செய்யப்படும் மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படும்' என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளரான எல்.ஆதிமூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்கவும், மணல் தட்டுப்பாட்டைப் போக்கவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மணலை தமிழக அரசின் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த மணலை பொதுப்பணித்துறை தான் விற்பனை செய்யும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் படி இறக்குமதி செய்யப்படும் மணலை தனிநபர் எடுத்துச் செல்லவோ, வேறு எங்கும் கொண்டுச் செல்லவோ தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
இது சட்டவிரோதமானது. எனவே இறக்குமதி செய்யப்படும் மணலை அரசுதான் விற்பனை செய்யும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித்துறையின் சிறப்பு செயலாளர் கே.பத்மநாபன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'இந்தப் பிரச்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. மனுதாரரான நாளிதழ் வெளியீட்டாளர் எந்தவொரு கட்டுமானத் தொழிலிலோ, மணல் இறக்குமதி செய்யும் தொழிலிலோ ஈடுபடவில்லை. மணல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. கனிம வள ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி இறக்குமதி செய்யப்படும் மணலை தனியார் விற்பனை செய்ய தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மணலை அரசே விற்பனை செய்யும் என்ற அரசாணை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 
பிறப்பிக்கப்பட்டது. திருச்சி மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்ததே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டுக்கு காரணம். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால், சட்ட விரோதமாக மணல் கடத்தப்படும். சட்ட விரோத மணல் குவாரிகள் அதிகரிக்கும். மேலும் உள்ளூர் மணலைக்கூட இறக்குமதி செய்யப்பட்ட மணல் எனக்கூறி விற்பனை செய்வார்கள். இவற்றைத் தடுக்கவே இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழக 
அரசின் கடமை. வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்யக்கூடாது என யாரையும் தடுக்கவில்லை. அதனை ஒழுங்குபடுத்தி முறையாக விற்பனை செய்ய வேண்டியுள்ளது. 
எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை வரும் மார்ச் 14-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com