உடல், மனநலனைப் பேண உதவும் இயற்கை மருத்துவம்

உடல், மனநலனைப் பேண உதவும் யோகா, இயற்கை மருத்துவக் கண்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெறும் கண்காட்சியில் உடல் உறுப்புகளின் இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் மருத்துவர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெறும் கண்காட்சியில் உடல் உறுப்புகளின் இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் மருத்துவர்.

உடல், மனநலனைப் பேண உதவும் யோகா, இயற்கை மருத்துவக் கண்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் 'ணஐ' (அக்குபஞ்சர் மருத்துவத்தை குறிப்பது) ஆரோக்கிய கண்காட்சி-2018' வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
இந்தக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
பக்க விளைவில்லாத சிகிச்சை: அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 50 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, சர்க்கரை, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை, குழந்தையின்மை, 
நீர்க்கட்டி குறைபாடுகள், வலி நிவாரண சிகிச்சைகள், தோல் வியாதிகள், வாழ்வியல் நோய்கள் என பலவகையான நோய்களுக்கும், அவை வராமல் தடுப்பதற்கும் யோகா, இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர் ஆகியவை மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
உடல், மன நலன் பேண...: மலச்சிக்கல், தலைவலி, ஒற்றைத் தலைவலி, சரும அழகு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் களிமண் குளியல், வைட்டமின் சி குறைபாடு , ஹார்மோன் சுரக்கும் செயல்பாட்டை சமன் செய்தல், தூக்கமின்மை, கண் பார்வை, தோல் பிரச்னைகளைப் போக்கவும், எலும்புகளை வலுவூட்ட உதவும் சூரியக் குளியல், கழிவுகளை வெளியேற்றவும், சருமப் பிரச்னைகளைப் போக்கவும், புத்துணர்வு, உடல் வலியைப் போக்கும் நீராவி குளியல், உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும், உடல் எடையைக் குறைக்க உதவும் வாழை இலைக் குளியல், ஜீரண உறுப்புகள், நரம்புகள், ரத்தக் குழாய்கள் ஆகியவற்றில் உண்டாகும் குறைகளை நீக்குவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் காந்த சிகிச்சை, மன அழுத்தம் போக்கவும், உடல் புத்துணர்ச்சியைப் பெற உதவும் குரோமோ தெரபி எனப்படும் வண்ண சிகிச்சை, உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, நறுமண சிகிச்சை, எடை குறைப்பு, ஆரோக்கிய மகப்பேறு, சரும, தலைமுடி பராமரிப்பு சிகிச்சை, கண் பராமரிப்பு சிகிச்சை, நினைவாற்றல் பயிற்சி, ஆரோக்கிய குழந்தை வளர்ப்பு ஆகியவை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளள.
அக்குபஞ்சர் சிகிச்சை: கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மருந்தில்லா மருத்துவ முறையான சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்குபஞ்சர் கிசிக்சை மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. உடலில் இயங்கும் நாடிகளை அடிப்படையாகக் கொண்டு அக்குபஞ்சர் கிசிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது. 
மனிதனின் உடல் அமைப்பு, உடலில் உள்ள நாடிகள், நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகியவை இக்கண்காட்சியில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
அனுமதி இலவசம்: வெள்ளிக்கிழமை (பிப். 23) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் குறைப்பு ஆகியவற்றுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசமாகும்.
94 அரங்குகள்: மூன்று தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 54 அரங்குகளும், தனியார் சார்பில் 40 அரங்குகளும் என மொத்தம் 94 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
3,000-த்துக்கும் மேற்பட்டோர் பார்வை: இக்கண்காட்சியை 18-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 2,000-த்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வெள்ளிக்கிழமை (பிப். 23) பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com