கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கல்விக் கடன் வழங்காமல் நீதிமன்றத்தை கருவியாகப் பயன்படுத்திய பொதுத்துறை வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கடன் வழங்காமல் நீதிமன்றத்தை கருவியாகப் பயன்படுத்திய பொதுத்துறை வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முத்தழகி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2011 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்காக போளூர் தாலுகா கேளூரில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளை ஒன்றில் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தேன். வங்கி நிர்வாகம் கல்விக்கடன் வழங்கவில்லை. எனவே எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, மாணவியின் கோரிக்கையை பரிசீலித்து கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கோடீஸ்வரர்களுக்கு மட்டும் அள்ளிக் கொடுப்பதா....இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எந்தவித நிபந்தனையும் உத்தரவாதமுமின்றி கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் வாரிக் கொடுக்கும் வங்கிகள், ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தால் அவர்களை அலைகழித்து வருகின்றனர். அவ்வாறு ஏழைகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் மறுக்கப்படுவதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். 
பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும், ஏழைகளுக்கு வேறு மாதிரியான போக்கை கடைபிடிப்பது கண்டனத்துக்குறியது. வழக்கைத் தொடர்ந்த மாணவி படிப்பை முடிக்கும் வரை கடன் வழங்காமல் இழுத்தடித்து இந்த வழக்கை செல்லாததாக்கி விட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 48 ஆயிரம் கோடி வரை வங்கியில் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தாத நிலையில், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என இதுவரை எந்த புகாரும் வந்தது இல்லை. உரிய நேரத்தில் கல்விக்கடன் மறுக்கப்படுவதால், நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மிகச்சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்காமல் போய் விடுகின்றனர். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு கிடைக்காமல் போவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு இரண்டு வார காலத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com