தமிழக வாகனங்கள் மீது கேரள ஜனதா தளத்தினர் தாக்குதல்

பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு தண்ணீர் வழங்கிவரும் நிலையிலும், தமிழக சரக்கு வாகனங்கள் மீது கேரள ஜனதா தளம் கட்சியினர் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை
தமிழக மீனாட்சிபுரம் பகுதியில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர்.
தமிழக மீனாட்சிபுரம் பகுதியில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர்.

பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு தண்ணீர் வழங்கிவரும் நிலையிலும், தமிழக சரக்கு வாகனங்கள் மீது கேரள ஜனதா தளம் கட்சியினர் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை உடைத்ததால் இரு மாநில எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சி யும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சி தண்ணீரும் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். தமிழக சோலையாறு அணையிலிருந்து 
கேரள சோலையாறு அணைக்கு 12.3 டிஎம்சியும், ஆழியாறு அணையிலிருந்து 7.25 டிஎம்சியும் ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் வழங்கவேண்டும். இதில், கேரள சோலையாறு அணைக்கு வழங்கும் தண்ணீரை கேரளம் பாசனத்துக்குப் பயன்படுத்துவதில்லை. மாறாக, மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகிறது. ஆழியாறு அணையிலிருந்து வழங்கும் தண்ணீரை சித்தூர் வட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு கேரளம் பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது நடைமுறையில் இருந்துவருகிறது. 
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஏபி திட்ட அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சராசரி மழைப் பொழிவை விட மிகவும் குறைவாகவே மழை பெய்தது. இதனால், பிஏபி தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே இருந்துவருகிறது. இருந்தபோதும், தற்போதுவரை கேரளத்துக்கு இந்த ஆண்டு வழங்கவேண்டிய 7.25 டிஎம்சி தண்ணீரில் 5.50 டிஎம்சிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதும், இன்றுவரை கேரளத்துக்கு நிறுத்தப்படாமல் தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரை விநாடிக்கு 85 கன அடி தண்ணீர் வழங்கப்பட்டது. 
கேரளத்துக்கு மீதம் வழங்கவேண்டிய தண்ணீரை வழங்க மே மாதம் வரை அவகாசம் உள்ளது. மீதமுள்ள தண்ணீரை கேரளத்துக்கு வழங்க முடியாது என தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. 
இப்படி இருக்கும் நிலையில், கேரள ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணன்குட்டி வழிகாட்டுதல்படி, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஒரு சில அமைப்புகளும் இணைந்து வியாழக்கிழமை இரவில் இருந்து தமிழக -கேரள எல்லைகளில் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் பால், இறைச்சி, காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்திவருகின்றனர். மேலும், இரண்டு லாரிகள், இரண்டு சரக்கு ஆட்டோக்களின் மீது தாக்குதல் நடத்தி கண்ணாடிகளையும் உடைத்தனர். வேலந்தாவளம், நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகள் வழியாக கேரளம் வரும் சரக்கு வாகனங்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இதனால், தமிழக- கேரள எல்லைகளில் இருமாநில போலீஸாரும் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக போலீஸ் சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை காலையில் 30-க்கும் அதிகமான தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் அதன் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் திரண்டு கேரள வாகனங்களை தமிழகத்துக்குள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சித்தூர் எம்எல்ஏ கிருஷ்ணன் குட்டியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை ஆனைமலை போலீஸார் கைது செய்தனர். வெள்ளிக்கிழமை மாலையில் மதிமுக இளைஞரணி நிர்வாகி ஈஸ்வரன் தலைமையில் 20-க்கும் அதிகமானோர் மீனாட்சிபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரக்கு போக்குவரத்து பாதிப்பு: இதனால், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, வேலந்தாவளம் ஆகிய பகுதிகளின் வழியாக கேரளத்திற்கு சென்ற சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தமிழக போலீஸார் தமிழக பகுதியிலேயே சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதையடுத்து, தமிழகத்தில் இருந்து கேரளம் செல்ல வேண்டிய வாகனங்கள் சாலை ஓரத்தில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com