பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை ஒட்டி, மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட உள்ள மானிய விலை திட்டத்தின் கீழ், வழங்கப்படவுள்ள இருசக்கர வாகனங்கள்.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட உள்ள மானிய விலை திட்டத்தின் கீழ், வழங்கப்படவுள்ள இருசக்கர வாகனங்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை ஒட்டி, மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
பணிபுரியும் மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளான சனிக்கிழமை (பிப்.24) அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
பிரதமர் வருகை: மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை 3.20 மணியளவில் தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காமராஜர் சாலையில் உள்ள ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பின்னர், கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
புதுவை செல்லும் மோடி: விழா முடிவடைந்ததும் இரவு 7 மணியளவில் புறப்பட்டு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். இரவு அங்கேயே தங்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கார் மூலம் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்குள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின், ஆரோவில் பொன் விழாவை துவக்கி வைக்கிறார். பின்னர், பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவர், தனி விமானம் மூலம் சூரத்துக்குச் செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு: பிரதமர் வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், கலைவாணர் அரங்கம் மற்றும் ஆளுநர் மாளிகை ஆகிய இடங்களை தில்லியிருந்து வந்துள்ள சிறப்புப் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக கண்காணித்து வருகின்றனர். பிரதமர் செல்லும் இடங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1 லட்சம் மகளிர் பயன்: தமிழக அரசின் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சிலருக்கு மானிய விலை ஸ்கூட்டரை வழங்கி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். படிப்படியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்.
தலைவர்களுடன் சந்திப்பு: காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திரமோடி தங்கியிருக்கும் நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து இந்தச் சந்திப்பு குறித்து உறுதி செய்யப்பட
வில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com