பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு: 44 இடங்களில் உதவி மையங்கள் அமைக்க ஏற்பாடு: அமைச்சர் கே.பி.அன்பழகன்

அடுத்த கல்வியாண்டு முதல் (2018-19) பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படவுள்ள நிலையில்,
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு: 44 இடங்களில் உதவி மையங்கள் அமைக்க ஏற்பாடு: அமைச்சர் கே.பி.அன்பழகன்

அடுத்த கல்வியாண்டு முதல் (2018-19) பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படவுள்ள நிலையில், இதற்காக 44 இடங்களில் உதவி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:-
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்குபெற, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருகை தர வேண்டியுள்ளது. மாணவர்களின் நலனைக் கருதில் கொண்டு, 2018 -ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளம் (ஆன்லைன்) மூலம் நடத்தப்படவுள்ளது. இதன் பயனாக, விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக தங்களது வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கு பெறலாம். மேலும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க வசதியாக அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் ஆகியவற்றில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 44 உதவி மையங்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்படும். மாவட்டத்தின் அளவைப் பொறுத்து , மாவட்டந்தோறும் ஒன்று அல்லது 2 மையங்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் சேர்க்கை குறைந்த வருகிறது. எனவே, தங்களின் பொறியியல் கல்லூரியை மூடுவதற்கும், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை மூடுவதற்கும் அனுமதி கேட்கும் கல்லூரிகளுக்கு அதற்கான அனுமதி உடனடியாக அளிக்கப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்கான விரிவுரையாளர்கள், அலுவலக உதவியாளர்கள், நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்வதற்காக தனியாக ஒரு அமைப்பினை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அமைச்சர். 
வழிகாட்டி கையேடு வெளியீடு: இதனிடையே, பொறியியல் படிப்புகளுக்கான ஆன்-லைன் மாணவர் சேர்க்கை தொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய வழிகாட்டி கையேட்டை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க, எஸ்.சி., எஸ்.சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.250 கட்டணமாகவும், இதர பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் செயல்முறை, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்த பின்னர் தொடங்கப்படும். தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி, மதிப்பெண்களின்படி பல குழுக்களாக பிரிக்கப்பட்டு, கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர். 
எஸ்.சி, எஸ்.சிஏ, எஸ்.டி. ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 -மும், இதர பிரிவினர் ரூ.5,000- மும் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்லைன் மூலம்செலுத்தியப் பின்னர், தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். பின்னர், மாணவர்களுக்கு தாற்காலிக இடஒதுக்கீடு அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை 3 நாள்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
விளையாட்டு வீரர்-மாற்றுத்திறனாளிகளுக்கு: விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிற்துறைப் படிப்பை முடித்தவர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வும், துணை கலந்தாய்வும் நேர்முகத் கலந்தாய்வாக நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com