யோகா மனித குலத்துக்குக் கிடைத்த அருமருந்து

மனித குலத்துக்குக் கிடைத்த அருமருந்தான யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
யோகா மனித குலத்துக்குக் கிடைத்த அருமருந்து

மனித குலத்துக்குக் கிடைத்த அருமருந்தான யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா -இயற்கை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெறும் ஆரோக்கிய கண்காட்சியின் தொடக்க விழா, மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்காக ரூ. 6.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், ரூ. 5.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
இயற்கை மருத்துவம் என்பது சிறந்த மருத்துவ முறையாகும். நோய்த் தடுப்பு முறையும், அதற்கு இயற்கை முறையிலான தீர்வை விளக்கும் வகையிலும் இந்தக் கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்கு கிடைத்த அருமருந்தான யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உருவாக்க இந்தக் கண்காட்சி பயன்படும். 
இயற்கையில் விளையக்கூடிய பழங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும்போது பெரும்பாலான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. அதேபோல், அக்குபஞ்சர் சிகிச்சை முறை குறித்து தெரிந்துகொள்ள இக்கண்காட்சி உதவிகரமாக இருக்கும் என்றார் முதல்வர்.
முன்னதாக, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரங்குகளையும் பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர், அங்குள்ள இயற்கை உணவுகளை உட்கொண்டனர். மேலும், மாணவர்களின் யோகா பயிற்சிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த விழாவில், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம், ஹேமியோபதி துறை ஆணையர் (பொறுப்பு), டாக்டர் கே. செந்தில்ராஜ், அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
50 படுக்கைகள் கொண்ட கட்டடம்: சென்னை அரும்பாக்கம், அரசு யோகா -இயற்கை மருத்துவக் கல்லூரியில் ரூ. 6 .6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஆய்வகம், சிகிச்சைக்கான ஆலோசனை அறைகள், சிகிச்சை அறைகள், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பறைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரூ. 5.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விடுதியில் 200 மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com