பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வருகிறார். இதையொட்டி, புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வருகிறார். இதையொட்டி, புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரம் உதயமான ஐம்பதாம் ஆண்டு பொன்விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படுகிறார். காலை 10 மணியளவில் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்திறங்கும் அவருக்கு புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே. நாராயணசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
 ஆஸ்ரமத்தில் தியானம்: அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு பிரதமர் சென்றடைகிறார். அங்கு, சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுகிறார். ஆஸ்ரமப் பள்ளியில் சுமார் அரை மணி நேரம் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
 ஆரோவில் வருகை: அதன் பிறகு, கிழக்கு கடற்கரைச்சாலை, கோரிமேடு, திண்டிவனம் நெடுஞ்சாலை, இடையஞ்சாவடி வழியாக, தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவிலுக்கு முற்பகல் 11.30 மணிக்கு செல்கிறார். ஆரோவிலுக்கு வரும் முதல் பிரதமரான நரேந்திர மோடி, அங்குள்ள மாத்திர் மந்திர் தியான மையத்தில் சிறிது நேரம் தியானம் செய்கிறார். பின்னர், ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழாவையொட்டி, அங்குள்ள குளத்தில் புனித நதிகளின் தண்ணீரை ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து, அருகே உள்ள பாரத் நிவாஸில் நடைபெறும் ஆரோவில் பொன்விழா ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர், அதே வழியாக மீண்டும் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் செல்கிறார்.
 பாஜக பொதுக் கூட்டம்: விமான நிலையம் அருகே நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பிற்பகல் ஒரு மணிக்கு உரையாற்றுகிறார். பிரதமரின் உரை முடிந்ததும் பிற்பகல் 1.30 மணிக்கு விமான நிலையம் செல்ல உள்ளார். அங்கு முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரை சந்தித்து விட்டு பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்.
 மூன்றடுக்கு பாதுகாப்பு: பிரதமரின் வருகையையொட்டி புதுச்சேரியில், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 4 கம்பெனி சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி விமான நிலையம், பிரதமர் பயணம் செல்லும் சாலைகள், ஆஸ்ரமம் பகுதி அமைந்துள்ள வெள்ளை நகரம் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவப் படையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டன.
 ஒத்திகை: பிரதமர் சாலையில் செல்லும் பயணப் பாதையில் வாகன ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. பிரதமர் செல்லும் பாதை அவர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. பிரதமர் பயணம் செய்யும் கருப்பு நிறத்திலான குண்டு துளைக்காத 5 கார்களுக்கு முன்பும் பின்பும் துணை ராணுவம் படைகளும், கார்களுக்கு பின்னால் அவசர ஊர்தி, பாதுகாப்பு வாகனங்கள், முக்கிய சிறப்பு விருந்தினர்களின் கார்கள் அணிவகுத்து சென்றன.
 பிரதமர் வருகையையொட்டி, ஆரோவிலில் டிஜிபி விஜயகுமார் தலைமையில் 4ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com