வளமான தமிழகத்தை அமைப்போம்

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வளமான தமிழகத்தை அமைக்க சபதம் ஏற்போம் என்று சட்டப் பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வளமான தமிழகத்தை அமைப்போம்

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வளமான தமிழகத்தை அமைக்க சபதம் ஏற்போம் என்று சட்டப் பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் அதிமுக பிளவுபட்டபோது, கட்சியை ஒன்றிணைத்து இழந்த சின்னத்தை மீட்டு, இழந்த எம்.ஜி.ஆரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் ஜெயலலிதா. மக்களுக்கு நன்மை செய்யவும், அதற்கு முரணான வகையில் செயல்படும் எந்த சக்தியையும் வீழ்த்திடவே ஜெயலலிதா நம்மைப் பயிற்றுவித்தார். பல நலத்திட்டங்கள் மூலமாக அவர் ஏற்றி வைத்த திருவிளக்கு இன்று எத்தனையோ குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
 நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை நிலைநிறுத்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும். ஆனால், இன்றோ அத்தனை சிறப்புகளையும் இழந்து, தமிழகத்தின் பெருமையையும், கட்சியின் சிறப்பையும் தில்லியிடம் அடிமை சாசனமாக எழுதிக் கொடுத்துவிட்டனர். இந்த கொடுஞ்செயலை தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கும் புரட்சியின் காலம் இது.
 தமிழக மக்களும் கட்சித் தொண்டர்களும் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி. ஜெயலலிதா மறைந்தாலும், அவர் வகுத்த தலைநிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற கொள்கை என்றென்றும் வாழ்ந்திருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
 ஜெயலலிதா நிர்மாணித்த மக்கள் நல கொள்கைகளை காத்திட அரசியல் களத்தில் திரண்டுவந்துள்ள கட்சித் தொண்டர்கள், முன்னோடிகள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் பெரும் புகழையும், அவரின் மக்கள் நல கொள்கைகளையும் காத்திடுவோம். அதுவே ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளில் நாம் மேற்கொள்ளும் உறுதிமொழி.
 அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது, அவர் நிறுவிக்காட்டிய உண்மையான மக்கள் அரசை, யாருக்கும் மண்டியிடாத அரசை, வளமான தமிழர் வாழ்வை, தலைநிமிர்ந்த தமிழகத்தை அமைத்துக் காட்ட சபதம் ஏற்றிடுவோம் என்று கூறியுள்ளார் தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com