உலக ஒற்றுமைக்கு முன்னோடி ஆரோவில்: பிரதமர் மோடி புகழாரம்

ஆரோவில் சர்வதேச நகரம் உலக ஒற்றுமைக்கு முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாராம் சூட்டினார்.
உலக ஒற்றுமைக்கு முன்னோடி ஆரோவில்: பிரதமர் மோடி புகழாரம்

ஆரோவில் சர்வதேச நகரம் உலக ஒற்றுமைக்கு முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாராம் சூட்டினார். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் அரவிந்தர், அவரது சீடர் அன்னை மீரா அல்போன்ஸா ஆகியோரின் முயற்சியில், கடந்த 1968 ஆம் ஆண்டு பிப்.28-இல் உதயமானது. இந்த சர்வதேச நகரம் உருவான 50 ஆம் ஆண்டு பொன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஆரோவிலுக்கு கார் மூலம் ஞாயிற்றுக்கிழமை 11.45 மணிக்கு வந்தார். அங்குள்ள சாவித்ரி பவன் மையத்தில் அரவிந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ஆரோவில்வாசிகள் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். பின்னர், அருகிலுள்ள மாத்திர் மந்திர் தியான மைய கூடத்துக்கு சென்ற பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். அங்கு அமைந்துள்ள திறந்த வெளி அரங்கையும், நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆல மரத்தையும் பார்வையிட்டார். ஆரோவில் பொன் விழா நினைவாக, அங்குள்ள தாமரைக் குளத்தில், இந்திய நதிகளின் புனித நீரை ஊற்றினார்.
 தொடர்ந்து, பகல் 12.45 மணிக்கு ஆரோவில் அரவிந்தர் அரங்கில் தொடங்கிய பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
 விழாவில், பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய சிறப்புரை : அரவிந்தரின் எண்ணங்களின் வெளிப்பாடாக உருவான ஆரோவில் நகரம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக, கலாசாரம், கல்வி, பொருளாதாரம், ஆன்மிகத்துக்கான ஆராய்ச்சி இடமாக விளங்குகிறது. அவரது ஆன்மிகக் கொள்கை இன்று வரை நம்மை ஈர்க்கிறது. ரவீந்திரநாத் தாகூர், "நமஸ்கார்' என்ற பாடலில் அரவிந்தரைப் புகழ்ந்துள்ளார். ஆரோவில் பிரபஞ்சத்தின் நகராக விளங்க அன்னை மீரா அல்போன்ஸா விரும்பினார். அதன் வெளிப்பாடாகவே இங்கு பல நாட்டினரும் திரண்டுள்ளனர்.
 எல்லைகளைத் தாண்டி அடையாளங்களைக் கடந்து, அனைவரையும் ஓரிடத்தில் இணைக்கிறது ஆரோவில் நகரம். உயர்ந்த கொள்கைகளைக் கொண்டு அன்னை உருவாக்கிய இந்நகரம், உலகமே ஒரே குடும்பம் என்ற சமயக் கோட்பாட்டைக் கொண்டது.
 124 பேருடன் தொடங்கிய இந்த நகரில் தற்போது 49 நாடுகளைச் சேர்ந்த 2,400 பேர் வசிக்கின்றனர். இது அடுத்த கோட்பாடுகளுக்கு கொண்டு செல்கிறது. ஒருங்கிணைந்த உணர்வு ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் இருக்க வேண்டும் என்பதே அரவிந்தரின் கொள்கை. இதனையே உபநிஷதங்களும் சொல்கின்றன. காந்தியும் இதையே வெளிப்படுத்தியுள்ளார். அரவிந்தரின் சிஷ்யரான கல்வியாளர் கிரிபாய்ஜோஷி எனக்கு கல்வி ஆலோசகராக இருந்துள்ளார்.
 சுற்றுச்சூழல் மீள் உருவாக்கம், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, இயற்கை விவசாயம், தேவையான கட்டடக் கலை, நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்றவற்றைச் செயல்படுத்தி உலகுக்கு முன்னோடியாக ஆரோவில் திகழ்கிறது.
 ரிக் வேதத்தின் மேலான எண்ணங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வர வேண்டும். அதனைப் பின்பற்றி சாதாரண மக்களை மேம்படுத்தும் எண்ணங்களை ஆரோவில் மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாகவே உலகுக்கான ஆன்மிகத் தலமாக இந்தியா விளங்குகிறது. உயர்ந்த மதங்கள் பிறந்த நாடு இந்தியா. இவையே, மனிதர்களை ஆன்மிகப் பாதையில் கொண்டு செல்கிறது. அகில உலக யோகா தினமாக ஜூன் 21-ஆம் தேதியை ஐநா சபை அறிவித்தது. இது இந்திய கலாசாரத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார் பிரதமர் மோடி.
 ஆரோவில் அமைப்பின் தலைவர் கரன்சிங் வரவேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழாவில், ஆரோவில் பொன் விழா ஆண்டு நினைவு அஞ்சல் தலை, ஆரோவில் கட்டமைப்புகள் குறித்த நூல்கள் வெளியிடப்பட்டன. புதுவை ஆட்சியர் சத்தியேந்திரசிங்துர்சாவத், புதுவை பல்கலைக்கழகத் துணை வேந்தர் குர்மிந்தர்சிங், தலைமைச் செயலர் அஸ்வினிகுமார், பிரான்ஸ் தூதரக அதிகாரி கேத்ரின்சுவார்ட் மற்றும் ஆரோவில்வாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com