காஞ்சிபுரம் தொண்டு நிறுவனத்தில் மர்ம மரணங்கள்: நீதிபதி தலைமையில் விசாரணை தேவை

காஞ்சிபுரம் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் தொண்டு நிறுவனத்தில் மர்ம மரணங்கள்: நீதிபதி தலைமையில் விசாரணை தேவை

காஞ்சிபுரம் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 காஞ்சிபுரம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தத் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான போலி ஆம்புலன்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.
 இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு,
 எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
 இந்தச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர்.
 ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். பிரச்னையைத் திசைதிருப்ப, வழக்கமாகப் பின்பற்றும் வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரைக் காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர். இதை அறிந்து மதிமுகவைச் சேர்ந்த காஞ்சிபுரம் நிர்வாகிகள் ஜி.கருணாகரன், தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, தொண்டு நிறுவனத்தின் மரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பொய் வழக்கு போட்டவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com